பக்கம்:மேனகா 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

மேனகா

பெண்பிள்ளைகளை இங்கே அந்தரத்தில் நிறுத்தி வைத்து விட்டு எங்கேயோ போய் உட்கார்ந்து கொண்டானே கட்டையிலே போவான்! என்று ஆத்திரமாக மொழிந்தாள்.

“உங்கள் தம்பியைக் காணாமல் கூட்டத்தில் ஒருவேளை தேடி அலைகிறாரோ என்னவோ!” என்றாள் வஞ்சகத்தை அறியாத வஞ்சி.

“ஆம் ஆம். அப்படித்தானிருக்கும். அடுத்த அறையில் அவனிருக்கிறானா வென்று நான் எட்டிப்பார்க்கிறேன்” என்று சொல்லிய வண்ணம் பெருந் தேவியம்மாள் எதிரிலிருந்த அறையின் நிலைப்படியண்டையில் போய் அதன் கதவைச் சிறிது திறந்து அப்புறம் எட்டிப்பார்த்த வண்ணம், “ஏனடா சாமா! நாங்கள் எவ்வளவு நாழிகையடா இங்கே நிற்கிறது? எங்கே டிக்கட்டு? இப்படிக் கொடு!” என்று கேட்டுக்கொண்டே கதவிற்கு அப்புறம் நடந்தாள். அவள் டிக்கட்டை வாங்கிக்கொண்டு திரும்பி வருவாளென்று நினைத்து மேனகா அப்படியே சிறிது நேரம் நின்றாள். ஆனால், அப்புறஞ் சென்ற பெருந்தேவியம்மாளின் குரலாகிலும், சாமாவையரின் குரலாகிலும் பிறகு உண்டாக வில்லை. அவ்விதமே மேனகா ஒன்றையும் அறியாதவளாய்க் கால் நாழிகை நின்றாள். எவரும் இல்லாத இடத்தில் தான் தனிமையில் நின்றதைப் பற்றியும், போனவர்கள் திரும்பி வராததைப் பற்றியும், அவள் ஒரு விதக் கவலையும் அச்சமும் கொண்டு தத்தளித்து நின்றாள். அரை நாழிகை யாயிற்று. அவளுடைய மனோவேதனை முன்னிலும் அதிகரித்தது. இன்னதென்று விவரித்தற்கு இயலாத ஒரு வித துன்பமும் சந்தேகமும் வதைக்க ஆரம்பித்தன. தான் முன்னால் சென்று எதிரில் தோன்றிய அறைக்குள் எட்டிப் பார்க்கலாமா என்னும் ஒருவித எண்ணம் மனதில் உதித்தது. ஆனால் காலெழவில்லை. அவள் மெல்ல நடந்து எதிரிலிருந்த வாசலையடைந்து மிக்க அச்சத்தோடு உட்புறம் எட்டிப் பார்த்தாள். அந்த அறையும் விசாலமாய்க் காணப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/84&oldid=1249160" இலிருந்து மீள்விக்கப்பட்டது