பக்கம்:மேனகா 1.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி தந்து மறைந்ததேன் காதலியே!

71


வராக:- சாமா! நீதான் சொல்லடா; என்ன விளையாடுகிறீர்கள்? என்ன நடந்தது ? - என்று பெருத்த ஆவலோடு கேட்டான்.

சாமாவையர் உடனே கனைத்துத் தமது தொண்டையைச் சரிபடுத்திக் கொண்டார்; முகத்தில் அதிகரித்த விசனக் குறியை உண்டாக்கிக் கொண்டவராய், “அப்பா வராகசாமி! நான் என்ன சொல்வேன்! முந்தாநாள் நாம் புறப்பட்டு ரயிலுக்குக் போன பிறகு உன்னுடைய மாமனார் ஒரு பெட்டி வண்டியில் வந்தாராம். வண்டி வாசலில் நின்றதாம். அவர் வண்டியைவிட் டிறங்காமல் ஒரு சேவகனை உள்ளே அனுப்பினாராம். அவன் உள்ளே வந்து டிப்டி கலெக்டர் வாசலில் பெட்டி வண்டியில் இருந்ததாகவும், மேனகாவைக் கூப்பிட்டதாகவும் சொன்னானாம். உடனே மேனகா வெளியில் போய் வண்டியின், பக்கத்தில் நின்று அவரோடு அரைநாழிகை வரையில் பேசிக்கொண்டி ருந்தார்களாம். பிறகு டிப்டி கவெக்டர் வண்டியின் கதவைத் திறக்க, அவளும் ஏறி வண்டிக்குள் உட்கார்ந்தாளாம். உடனே வண்டி போய்விட்டதாம். அவர் அவளை எங்கேயாவது அழைத்துக் கொண்டுபோய் விட்டுத் திரும்பவும் கொணர்ந்து விடுவாரென்று இவர்கள் நினைத்தார்களாம். அவன் திரும்பி வரவே இல்லை. நேற்று முழுவதும் பார்த்தோம்; இன்னமும் வரவில்லை. ஊருக்கு அழைத்துக்கொண்டு போய்விட்டார் போலிருக்கிறது. உனக்குத் தந்தி மூலம் தெரிவிக்க நினைத்தோம். நீ எவ்விடத்தில் தங்குகிறாய் என்பது தெரியாது ஆகையால், எந்த விலாசத்துக்கு அனுப்புவ தென்னும் சந்தேகத்தினால் அப்படிச் செய்யக் கூடவில்லை. முந்தா நாளிரவு, நேற்று முழுவதும், டிப்டி கலெக்டருக்கு வேண்டிய இடமெல்லாம் தேடிப் பார்த்தோம். அவர்கள் எங்கும் காணப்படவில்லை! அவர் அவளை ஊருக்குத்தான் அழைத்துக்கொண்டு போயிருக்க வேண்டும். ஆனால், அவர் உள்ளே வராமலும் எவரிடத்திலும் சொல்லாமலும் பெண்ணை அழைத்துப்போனதும், மேனகா அப்படியே வண்டியில் ஏறிப் போனதுமே வருத்தமாக இருக்கிறது” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/89&oldid=1249166" இலிருந்து மீள்விக்கப்பட்டது