பக்கம்:மேனகா 1.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மேனகா


அதைக் கேட்ட வராகசாமிக்கு அடக்க வொண்ணா கோபமும், ஆத்திரமும் உண்டாயின. அவனுடைய தேகம் பதறியது. “என்ன ஆச்சரியம்! ஏழெட்டு நாட்களுக்கு முன் வந்தவன், இங்கே அன்னியோன்னியமா யிருந்துவிட்டுப் போயிருக்கிறான். இதற்குள் அவனுக்கு என்ன கிறுக்கு வந்துவிட்டது! ஏனடி அக்கா! அவள் உங்களில் யாரிடத்திலும் சொல்லிக் கொள்ளாமலா போய்விட்டாள்?” என்று கேட்டான்.

அதைக் கேட்ட பெருந்தேவிமனத்தாங்கலாக, “அவளேன் சொல்லுவாள்? நாங்கள் அவளுக்கு இலட்சியமா? நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்த மாதிரி ஊரில் ஒரு வருஷமாக நாறிக் கிடந்த தரித்திரத்தைத் திரும்ப அழைத்து வந்து நல்ல பதவியில் வைத்தோமல்லவா! அவளுடைய பகட்டைக் கண்டு அதற்குள் நீயும் மகிழ்ந்து போய்விட்டாய். அதனால் அந்த நாய்க்கு உச்சி குளிர்ந்து போய்விட்டது. உன்னுடைய தயவைப் பூர்த்தியாகச்சம்பாதித்துக் கொண்டவளுக்கு எங்களுடைய தயவு எதற்கு? எங்களிடம் ஏன் சொல்லுவாள்?” என்றாள்.

அதைக் கேட்ட வராகசாமிக்கு டிப்டி கலெக்டர் மீதும், மேனகாவின் மீதும் அடக்கமுடியாத கோபம் பொங்கி யெழுந்தது. அவர்கள் யாராயினும் அப்போது எதிரிலிருந்தால் அவன் அப்படியே கசக்கிச்சாறு பிழிந்திருப்பான். அவனுடைய கண்ணில் தீப்பொறி பறந்தது. “இந்தப் பீடைகளின் உறவு இன்றோடு ஒழிந்தது. இனி செத்தாலும் நான் இவர்களுடைய முகத்தில் விழிப்பதில்லை! சனியன் ஒழியட்டும்” என்று அவன் உறுதியாகக் கூறினான். எவ்வளவோ சிபார்சு செய்து சில நாட்களுக்கு முன்னரே பெண்ணைக் கொணர்ந்து விட்டவன், ஒரு வாரத்தில் யாதொரு காரணமுமின்றி அழைத்துப் போக வேண்டியதென்ன வென்பதே அவனது மனதைப் பெரிதும் வருத்தியது. வீட்டிலிருந்து வெளியே போக ஆரம்பித்தான்; இன்ன இடத்திற்குப் போகிறோம்; எவ்வளவு நேரமாக அலைகிறோம் என்பதை அறியாமல் பல தெருக்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/90&oldid=1249167" இலிருந்து மீள்விக்கப்பட்டது