பக்கம்:மேனகா 1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மேனகா

நிமஷத்தில் அவனது மனத்தில் கோடி எண்ணங்கள் உதித்தன. தொடக்க முதல் தன்னிடம் மாறாத அன்புடன் மனதிற்குகந்த விதமாய் ஒழுகி வந்த மேனகாவின் வடிவம், அப்போதே இதழ்களை விரித்து நகைக்கும் தாமரைப்போல, அவளது சொற்களும், செயல்களும், திரும்பத் திரும்ப அவனது நினைவில் தோன்றின. சுவரில் மாட்டப்பட்டிருந்த அவளுடைய புகைப்படத்தைப் பார்த்தான். உடனே அதை எடுத்து அருகில் பார்க்கவேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று, அதை எடுத்து அருகிற் பிடித்து உற்று நோக்கினான். மனதிலிருந்த விசனத்தை முகத்தின் புன்னகையால் மறைப்பதாகத் தோன்றிய அவ்வடிவத்தின் வதனத்தைக் கண்ணிமைப்பின்றி நோக்கினான். அறையின் வெளியிலிருந்ததன் சகோதரிமார்தன்னைப் பார்க்கிறார்களோ என்று திரும்பிப் பார்த்து ஆராய்ச்சி செய்து அந்தப் படத்திற்கு ஒரு முத்தம் கொடுத்தான். “ஆகா! உன்னை அன்போடு நடத்தாமல் வருத்துகிறேனே என்று நீ விசனப்பட்ட காலத்தில் எடுத்த படமல்லவா இது! நீ எவ்வளவு தான் மறைக்க முயன்றாலும் உன் விசனம் நன்றாய்த் தெரிகிறது. நான் உன்னுடைய மனதின் நோயை மாற்ற முயலும் சமயத்தில் நீ என்னை விட்டுப் போய்விட்டாயே! இனிமேல் உன்னை நான் எப்படி அழைத்துக் கொள்வேன்?” என்று பலவாறு எண்ணமிட்டு அவன் வருந்திக் கிடந்த சமயத்தில், “வரகுசாமி அய்யர்! வரகுசாமி அய்யர்!” என்று வீட்டின் வாசலில் எவனோ உரக்கக் கூவிய ஓசை உண்டாயிற்று. அவன் திடுக்கிட்டெழுந்து வெளியிற் சென்று பார்க்க, சேவகனொருவன் ஒரு தந்தியை நீட்டினான். வராகசாமி கையெழுத்துச் செய்து அதை வாங்கி மிகுந்த ஆவலோடு திறந்து படித்தான். அதில் அடியில் வருமாறு விஷயம் எழுதப்பட்டிருந்தது:- “ஆச்சரியத்திலும் ஆச்சரியம்! நான் சென்னைக்கு வரவுமில்லை; பெண்ணும் இவ்விடத்தில் இல்லை. குளங்கள் முதலிய எல்லா இடங்களில் நன்றாய்த் தேடிப் பார்க்கவும்; போலீசிலும் பதிவு செய்யவும், நானும் உடனே புறப்பட்டு நாளைக்கு அவ்விடம் வருகிறேன். அவசரம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_1.pdf/92&oldid=1249169" இலிருந்து மீள்விக்கப்பட்டது