பக்கம்:மேனகா 2.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

மேனகா

இரண்டொரு நிமிஷத்தில் கண்களைத் திறந்து, "அம்மா! என் விஷயத்தில் இவ்வளவு உபகாரம் செய்த குணமணியான உனது பெயர் இன்னதென்று அறியவும், உனக்கும், நேற்றிரவு என்னை வற்புறுத்திய அந்த மனிதருக்கும் என்ன உறவு முறை யென்பதையறியவும் என் மனம் பதைக்கிறது. அவைகளைத் தெரிவிக்கலாமா?” என்று நயந்து வேண்ட நூர்ஜஹான் விசனத்தோடு, “என்னுடைய பெயர் நூர்ஜஹானென்பது. ஆனால், நீ கேட்ட இரண்டாவது விஷயத்திற்கு மறுமொழி தர எனக்கு மனமில்லை. அந்த மனிதர் இதுவரையில் எனக்கு உறவினராயிருந்தது உண்மையே. நேற்றிரவு முதல் அவருக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லாமற் போய்விட்டது. ஆகையால், இப்போது அவரை நான் அன்னியராகவே மதிக்கிறேன்” என்று துக்கமும் வெட்கமும் பொங்கக் கூறினாள்.

அதைக் கேட்ட மேனகாவிற்கு அதன் கருத்தொன்றும் விளங்கவில்லை. ஊன்றி யோசனை செய்து அதன் கருத்தை அறிய முயன்றாள். களைப்படைந்திருந்த அவளது மூளை அதனால் பெரிதும் குழம்பியது. பெரிதும் ஆவலுடன், “நூர்ஜஹான்! நீ சொல்வது இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை; அவர் உனக்கு நெருங்கிய உறவினர் இல்லையென்றால், நீ அந்த வீட்டிலிருந்திருக்க மாட்டாய். நடந்தது நடந்துபோய்விட்டது. என்னிடம் உண்மையை மறைப்பதேன்? அந்த மனிதருடைய துர் நடத்தையால் உன் மனது அவர் மீது மிகவும் வெறுப்படைந்திருப்பது நிச்சயமாய்த் தெரிகிறது. இப்போது உறவு ஒன்றுமில்லையென்றே வைத்துக் கொள்வோம்; இதற்கு முன்னிருந்த உறவு முறைமையைத் தான் தெரிவிக்கக் கூடாதா?” என்று அன்பாக வற்புறுத்திக் கூறினாள்.

நூர்ஜஹான் வெட்கத்தினால் தனது முகத்தைக் கீழே தாழ்த்தினாள். “அம்மா மேனகா! அந்தக் கெட்ட மனிதரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/10&oldid=1251473" இலிருந்து மீள்விக்கப்பட்டது