பக்கம்:மேனகா 2.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

9

எனது உறவினரென்று சொல்லிக் கொள்ள வெட்கமாயிருக்கிறது. தவிர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அயல் மாதை விரும்பி அலையும் இழி குணமுடைய ஒரு மனிதரை ஒரு ஸ்திரீ தனது கணவரென்று சொல்லிக்கொண்டால் உலகம் நகைக்கு மல்லவா? அந்த இழிவான நிலைமையிலேயே நான் இப்போதிருக்கிறேன்” என்று கூறினாள். அதிகரித்த வெட்கத்தினாலும் துயரத்தினாலும் அவளது தேகம் துடித்தது. கண்ணீர் வழிந்தது. அவளது மனதும், கண்களும் கலங்கின. அந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்ட மேனகா, “அடடா! எனக்குப் பேருபகாரம் செய்த மனிதருக்கு நான் நல்ல பதிலுதவி செய்தேன்! ஐயோ! பாவமே! மூடத்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டு உன்னைத் துக்கத்தில் ஆழ்த்தி விட்டேனே! ஆகா!” என்று பெரிதும் பச்சாதாபமும் விசனமும் அடைந்தாள். விரைவாக எழுந்து நூர்ஜஹானது கண்ணீரைத் துடைத்துத் தேற்ற நினைத்து நலிந்த தனது மேனிக்கு வலுவைப்புகட்டி எழுந்திருக்க முயன்றாள். அவளது மெலிந்த நிலையில் அது அளவு கடந்த உழைப்பாய்ப்போனது. உடனே கண் இருண்டு போனது. மூளை குழம்பியது. மயக்கங்கொண்டு உணர்வற்று, அப்படியே சயனத்தில் திரும்பவும் வீழ்ந்து விட்டாள். முன்னிலும் அதிகரித்த மூர்ச்சையடைந்து பிணம்போலானாள்.

அதைக்கண்ட நூர்ஜஹான் பெரிதும் கவலைகொண்டு, அவளுக்கு எவ்விதமான தீங்குண்டாகுமோ வென்று மிகவும் அஞ்சி, தனது கணவனைக் குறித்த நினைவையும் விடுத்து அவளைத் தெளிவிப்பதே அலுவலாய்ச் செய்யத் தொடங்கினாள். திரும்பவும் மருந்தை மார்பில் தடவினாள். அவள் விழித்திருந்தபோது, உள்புறம் அருந்தும் மருந்தைக் கொடாமல் தான் ஏமாறிப் போனதை நினைத்து வருந்தினாள். அந்த முறை மேனகாவின் மூர்ச்சைத் தெளிவிக்க நூர்ஜஹான் எவ்வளவு பாடுபட்டாளாயினும் அவளது உணர்வு அன்று மாலைவரையில் திரும்பவில்லை. அப்போதைக் கப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/11&oldid=1251474" இலிருந்து மீள்விக்கப்பட்டது