பக்கம்:மேனகா 2.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

113

அவசரமான செலவுகளுக்கு வைத்துக்கொள்ள வேண்டுமென்று அவள் தீர்மானம் செய்து கொண்டாள். ஆனால், சாம்பசிவம் அதை நினைக்காமல், வேறு எவரிடமாயினும் கைமாற்றாக வாங்கலாமா என்று நினைத்துப் பார்த்தார். அவருக்குப் பணம் கொடுக்கக் கூடியவராக ஒருவரும் காணப்படவில்லை. அந்த நிலையில் அவருக்கு அவரது மாமனாரின் நினைவு வந்தது. அவர் தஞ்சைக்கு ஐந்தாறு மைல் வடக்கிலிருந்த தில்லை ஸ்தானம் என்னும் ஊரிலிருந்த ஒரு வைதிகப் பிராம்மணர். அவரது புத்திரனான கிட்டன் நெடுங்காலமாக இவர்களது வீட்டில் வளர்ந்து வந்தா னென்பது தெரிந்த விஷயமல்லவா? அந்த வைதிகரிடம் நிலத்தைத் தவிர பணமாகவும் நகைகளாகவும் ரூபா இரண்டாயிரத்திற்குச் சொத்து இருந்தது சாம்பசிவம், கிட்டன் முதலிய யாவருக்கும் தெரியும்; பொதுவாக தமது பெண்ணான தங்கம்மாளிடம் அவருக்கு அவ்வளவு உள்ளார்ந்த அபிமானம் இருந்ததாக அவர் அது. வரையில் காட்டிக் கொண்டதில்லை; பெண்வீட்டிலிருந்து ஏதாகிலும் பொருளை அப்போதைக்கப்போது அபகரித்துக் கொண்டு போவதில் அவர் கண்ணுங்கருத்துமா யிருந்தாரன்றி, பெண்ணிடத்தில் ஒரு அன்பான மொழியையும் வழங்கி யறிந்தவரன்று. என்றாலும் தமது பெண்ணுக்கு வந்துள்ள பிராணாபாயமான அந்தப் பெருத்த ஆபத்துக்காலத்தில் அவர் அவசியம் இரக்கங்கொள்வாரென்று சாம்பசிவம் நினைத்தவராய், கிட்டனை நோக்கி, “ஏனடா இந்தச் சங்கதியைப் பற்றி தில்லை ஸ்தானத்துக்கு எழுதினாயா?” என்றார். “ஆம்; உடனே புறப்பட்டு வரும்படி கடிதமெழுதி ஒர் ஆளிடம் நேற்றைக்கே அனுப்பினேன்; என்னவோ அவர் இன்னம் வரவில்லை; வேண்டுமானால் நான் நேரில் போய் அவரையும் அழைத்துக்கொண்டு நானுறோ, ஐந்நூறோ கிடைக்கக்கூடிய பணத்தையும் வாங்கிக்கொண்டு வருகிறேன்” என்றான். சாம்பசிவம் அதில் உண்மையில் நம்பிக்கை

மே.கா.II-8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/114&oldid=1251994" இலிருந்து மீள்விக்கப்பட்டது