பக்கம்:மேனகா 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முற்றும் நனைந்தவர்க்கு ஈரமுண்டோ?

115

ஒய்ந்து உட்கார்ந்தனர். அப்போது பகல் மணி இரண்டாயிற்று; கிட்டன் வியர்த்து விருவிருத்த மேனியோடு விரைவாக உட்புறம் நுழைந்தான். இருவரும் அவனது முகத்தை நோக்கினர். அது விசனத்தையும், வெட்கத்தையும் காட்டியது. கனகம்மாள், “என்ன சங்கதி?” என்றாள். கிட்டன், “பணமில்லை" என்று உதட்டைப் பிதுக்கினான். “அவர் வரவில்லையா?” என்றார் சாம்பசிவம். “அவர் ஏன் வருவார்? பணத்தாசை பிடித்த மனிதனுக்குப் பெண்ணேது? பிள்ளையேது? இங்கே பெண் ஏதாவது கொடுப்பதனால் வாங்கிக் கொண்டு போக வருவார்” என்றான். அதைக் கேட்ட சாம்பசிவம், “பெண்ணைப் பெற்ற தகப்பன் அப்படியும் கிராதகனா யிருப்பானோ!” என்று நினைத்து வியப்பும் திகைப்பும் அடைந்து அசைவற்று, சித்திரப் பதுமைபோல அப்படியே உட்கார்ந்து போனார். கனகம்மாள் அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைகொள்ளாமல், “போனால் போகிறது; நீ குளித்துவிட்டு சாப்பிட வா!” என்று கூறினாள். அவனும் முதல் நாளிலிருந்து பட்டினியிருந்தவனாதலால் உடனே ஸ்நானத்திற்குச் சென்றான், சிறிது நேரத்தில் அவனுடைய சாப்பாடும் முடிந்தது.

உடனே கனகம்மாள் சாம்பசிவத்தைப் பார்த்து, “அப்பா! ஏன் கவலைப் படுகிறாய்? தலைக்கு மேல் வெள்ளம் போகுமானால், முழம் போனாலென்ன? சாண் போனாலென்ன? எல்லாம் போய்விட்டது; இனி ஏன் கவலை? என் பேரிலிருக்கும் நிலத்தையும் வீட்டையும் அடமானம் வைத்து ரூபா ஆயிரம் வாங்கிக்கொண்டு வா; உத்தியோகம் இனி திரும்ப வரும் வரையில் நம்முடைய செலவுக்குப் பணம் வேண்டும்; பட்டணத்தில் வைத்தியச் செலவு, படிச் செலவு எவ்வளவு ஆகுமோ; எல்லாவற்றிற்கும் கையில் ரூபா ஆயிரம் இருக்க வேண்டும்” என்றாள். சாம்பசிவம் திகைத்து, “எப்போது ஊருக்குப் போகிறது? கடன் வாங்க சாவகாசம் எங்கே இருக்கிறது?” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/116&oldid=1251996" இலிருந்து மீள்விக்கப்பட்டது