பக்கம்:மேனகா 2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேம்போ கரும்போ

167

பகைமையிருந்ததனால் ஒருகால் பொய்க் கடிதங்களை அவன் வைத்திருக்கக் கூடாதா? ஆகையால், இந்தக் கடிதங்களை வைத்துக் கொண்டே ஒரு முடிவான தீர்மானம் செய்வது தருமமாகாது. நான் சொல்லுகிறே னென்று நீங்கள் ஆயாசப்படக்கூடாது. நான் வெறும் வாக்குவாதமாகப் பேசுகிறேன்; உங்களுடைய சகோதரிமார் அவள் விஷயத்தில் இப்படிச் செய்ய முகாந்திரமில்லை யென்கிறீர்களே! அவர்கள் அவளுடைய ஆபரணங்களை அபகரித்துக்கொள்ளவோ, அல்லது வேறு எந்தக் கருத்துடனோ அவளைக் கொன்றிருக்கக் கூடாதா? அல்லது அவளைப் பராதீனப்படுத்தியிருக்கக் கூடாதா?

வராக:- அவளை நான் கடற்கரையில் கண்டுதானே கொல்லப்போனேன்; அவள் பிறரால் கொல்லப்பட்டிருப்பாள் என்னும் சந்தேகம் ஏன் உண்டாகவேண்டும்? அவளுடைய மனதுக்கு விரோதமாக அவள் பராதீனப் படுத்தப்பட்டி ருந்தால், சுயேச்சையாக மோட்டார் வண்டியில் காற்று வாங்க வந்திருக்க மாட்டாளல்லவா? அவள் தப்பித்து என்னிட மல்லவா வந்திருக்க வேண்டும். ஆகையால், அவள் கொல்லப்படவும் இல்லை; பராதீனப்படுத்தவுமில்லை யென்பது தெரிகிறதல்லவா?

வெள்ளை:- கடற்கரையில் நீங்கள் கண்ட பெண் அவள்தா னென்பதற்கு ருஜுவென்ன? அவளைப்போல உலகத்தில் இன்னொருத்தி இருக்கக்கூடாதா? உங்களுடைய ஆவேசத்திலும், மோட்டார் வண்டியின் விசையிலும் அவள் உங்கள் மனைவியைப் போலக் காணப்பட்டிருக்கலாம். அல்லது அவளாகவே இருந்தாலும், அவள் அன்னியருடைய வசத்திலிருந்து தப்பிவரக்கூடாமல் கட்டாயப்படுத்தப் பட்டிருக்கலாம் அல்லது புருஷனிடம் மறுபடி எப்படி வருகிறது என்கிற அச்சத்தினால் எங்கேயாகிலும் இருக்கலாகாதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/168&oldid=1252220" இலிருந்து மீள்விக்கப்பட்டது