பக்கம்:மேனகா 2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

173

வதியான தனது மனைவி தன்மீது கொண்ட அந்தரங்கமான வாஞ்சையினால், தன்னைக் காட்டிக் கொடுக்காமல் எப்படியும் காப்பாற்றி விடுவாளென்னும் ஒரு மூட நினைவு அப்போதைக்கப்போது அவனது மனதில் தோன்றி ஒருவகையான ஆறுதலை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவ்வாறே அன்றிரவு கழிந்தது. நூர்ஜஹான் என்ன செய்கிறாள் என்பதையும், மேனகா தனது வீட்டில் இருக்கிறாளோ அல்லது எங்காகிலும் போய் விட்டாளோ வென்பதையும் அறிந்துகொள்ளும் பொருட்டு நைனா முகம்மது, தனது வேலைக்காரி ஒருத்தியை மெல்ல வரவழைத்து, கேள்விகளைச் சாமர்த்தியமாகக் கேட்கத் தொடங்கினான். நூர்ஜஹானும், அவளது அக்காளும் தங்களது தகப்பனாரின் பங்களாவிற்கு இரவிலே போய்விட்டார்கள் என்னும் சங்கதியை அவள் தெரிவித்தாள். அதுகாறும் தனது அநுமதியின்றி தகப்பனாரின் வீட்டிற்குப் போகாத தன் மனைவி, அன்று இரவிலேயே போய்விட்டதைக் கேட்க, அவனது மனம் திரும்பவும் கலக்க மடைந்து குழம்பியது; தனது மனைவி தனக்கு எவ்விதமான துன்பமுண்டாக்க மாட்டாளென்பது நிச்சயமாயினும், அவர்களால் விடுவிக்கப்பட்ட மேனகா யாவற்றையும் தனது புருஷனிடம் சொல்ல, அதனால் என்ன துன்பம் நேருமோ வென்னும் அச்சம் தோன்றி, அவனை வதைக்க ஆரம்பித்தது. மேனகாவின் புருஷன் தன்மீது மாஜிஸ்டிரேட்டின் கச்சேரியில் பிராது கொடுப்பானாகில், அதற்குப் பிடிவாரண்டு பிறக்கும் என்பதை நைனா முகம்மது உணர்ந்தவன். ஆதலின், செய்வதின்னது என்பதை அறியாமல் தத்தளித்தான். அவனது வீட்டில் அவனுக்கு சையது இமாம் என்ற ஒரு வேலைக்காரன் இருந்தான்; நைனா முகம்மதுவுக்குப் புதிய ஆசை நாயகிகளை அமர்த்துவதிலும், அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து திருப்பி அனுப்புவதிலும் தேவையான செளகரியங்களை யெல்லாம் அவனே செய்பவன். மேனகாவை அழைத்து வந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/174&oldid=1252323" இலிருந்து மீள்விக்கப்பட்டது