பக்கம்:மேனகா 2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாதாள எட்சினி வசியம்

197

அழுதார்; கதறினார்; பதறினார்; அவர் பட்ட பாடுகள் அத்தனையும், களவாடப்பட்ட பொருளைத் திருப்ப வல்லமையற்றிருந்தன. அடிக்கடி பெருந்தேவியின் நினைவு அவரது மனதில் தோன்றியது. “நானோ பணத்தை எளிதில் அபகரித்து திருடனிடம் கொடுத்தேன். பெருந்தேவி, எத்தனையோ வருஷங்களாகச் சேர்த்துச்சேர்த்து முன்னூறு பவுன்களை இரவு பகலாய் இடுப்பில் கட்டிச் சுமந்தவள். தவிர பணத்தின்மேல் கொண்ட பேராசையால் தன்னுடைய சொந்த தம்பியின் பெண்டாட்டியை துலுக்கனிடம் விற்றதான கேவலமான காரியம் செய்து பணம் சம்பாதித்தவள்; பணம் போய்விட்ட தென்பதை அவள் கேட்பாளானால், அவள் அதை நம்பவும் மாட்டாள்; உடனே தாடகை, சூர்ப்பனகை வேஷமெடுத்து என்னோடு மடிபிடித்து மல்ல யுத்தத்துக்கு வந்து விடுவாள், தெருவெல்லாம் சிரிக்கும். அதனால் ரகசிய மெல்லாம் வெளியாய்விடும். கடைசியில் பெருத்த துன்பமும் ஜெயில் வாசமும் கிடைக்கும்” என்று அவர் நினைத்தார். ஆகையால், அவளை எப்படியாகிலும் வஞ்சித்து விட்டு, அவள் தம்மைக் கண்டுபிடிக்கமுடியாத வேறிடத்திற்குத் தாம் போய்விட வேண்டுமென்று தீர்மானித்தார். “பெருந்தேவியோ பங்களா பங்களா வென்று ஜெபம் செய்து, எப்போது அதற்குப் போவோம் என்று ஆவல் கொண்டிருக்கிறாள். ஆகையால் எப்படியாவது தந்திரம் செய்து அவளை பங்களாவில் குடிவைத்துவிட்டு, வரதாச்சாரியின் பெண்ணையும் வராகசாமிக்கு உடனே கலியாணம் செய்து வைத்து விட்டு சொல்லாமல் இராத்திரியே ஒடிப்போக வேண்டு” மென்று முடிவு செய்து கொண்டார். பங்களாவின் திறவு கோல் அதன் தோட்டக் காரனிடத்திலிருந்தது. சாமாவையர் சாயுபுவின் குமாஸ்தா வென்பதையும், கப்பல்காரருக்கு நட்பானவரென் பதையும், தோட்டக்காரன் அறிந்தவன். ஆகையால், அவர் உடனே அவனிடம் போய், கப்பல்காரரது அநுமதியின்மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/198&oldid=1252357" இலிருந்து மீள்விக்கப்பட்டது