பக்கம்:மேனகா 2.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

மேனகா

பங்களாவை ஒருவருக்கு வாடைகைக்கு விட்டிருப்பதாகக் கூறி, திறவுகோலை வாங்கிவந்து பெருந்தேவியிடம் கொடுத்து, அவளை அதில் உடனே குடிவைத்துவிடத் தீர்மானித்தார். தவிர, அவள் பங்களாவின் விக்கிரயப்பத்திரமெங்கே என்று கேட்பவ ளாதலால் அதற்கும் ஏதேனும் தந்திரம் செய்ய வேண்டும் என்று, அதைப்பற்றியும் அவர் இரவு முழுதும் சிந்தனை செய்து ஒருவகையான முடிவிற்கு வந்தார்; அவருக்கு மிகவும் நண்பனான ஒர் ஏழை முகம்மதியன் இருந்தான். அவனிடம் சென்று ரூபாய் நூறு கொடுத்து, ஒரு நாளைக்குக் கப்பல்கார சாயபுவாக நடிக்கும்படி அவர் தூண்டினார். அவன் தனது தரித்திரக் கொடுமையால் அதற்கிணங்கினான். ஒர் எழுத்துக் கூலிக்காரனால் விக்கிரயப்பத்திரமும் எழுதி முடிக்கப்பட்டது. மறுநாள் பத்துமணிக்கு ஐயர் நன்றாக உண்டு உடுத்திக் கொண்டு, விஷயங்களை ஒருவாறாக தமது மனைவியிடத்தில் சொல்லிவிட்டு, தாம் சப் ரிஜிஸ்டிரார் கச்சேரிக்குப் போய்விட்டு வருவதாக அவளிடம் சொல்லி விட்டுப் போய்விட்டார். அவ்வாறு அவர் போனபிறகு இரண்டொரு நாழிகை கழிய, நமது மலையாளத்து மந்திரவாதி, சாமாவையரது வீட்டிற்கு வந்து, முற்கூறப் பட்டவாறு அவரை அழைத்தார்; அதைக்கேட்டு, “யார் அங்கே?” என்று கேட்டுக் கொண்டு நடைக் கதவண்டை வந்து பார்த்த மீனாக்ஷியம்மாள், ஒரு முகம்மதியர் நின்றதைக் கண்டாள். ஆஜாநுபாகுவாக உயர்ந்து பெருத்திருந்த அவரது சாரீரம், பெருத்த தலைப்பாகை, அடந்து நீண்ட தாடி, மை தீட்டப்பட்ட கண்கள் முதலியவற்றைக் கண்டு அம்மாள் ஒருவாறு அச்சங் கொண்டவளாய், “என்ன சங்கதி? நீர் யார்?” என்று மெல்லக் கேட்டாள்.

மந்திரவாதி, “ஐயர் இக்கிறாரா?” என்றார்.

அம்மாள், “இல்லை; நீர் யார்?” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/199&oldid=1252358" இலிருந்து மீள்விக்கப்பட்டது