பக்கம்:மேனகா 2.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மேனகா


சாமா:- அவர் பெருத்த லக்ஷாதிபதி, எந்த நிமிஷத்திலும் அவரிடம் இருபதினாயிரம் முப்பதினாயிரம் கையிருப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால், அவர் முகூர்த்தத்தின் போதுதான் பணத்தைச் சம்பாவனை செய்து கொடுப்பார். அதுதான் ஒழுங்கு அதற்கு முன் கேட்பது மரியாதைக் குறைவு. அவர்கள் நம்மைப் பற்றி இழிவாக நினைத்துக் கொள்வார்கள். ஆனால், நாம் ஒரு காரியம் செய்யலாம். நமக்கு ஒரு மோட்டார் வண்டி வேண்டுமென்று கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்து விடுவோம்; நாம் வரும் தேதியில், அதை இரயிலடியில் கொண்டு ஒப்புவித்துவிட்டு அவ்விடத்திலேயே பணத்தை வாங்கிக்கொள்ளும்படி அவர்களுக்கு எழுதி ஏற்பாடு செய்து கொள்வோம். முன் பணம் வேண்டுமானால் நூறு ஐம்பது கொடுத்து வைப்போம்.

பெரு:- அதுவும் நல்ல யோசனைதான். சம்பந்தி ஐயங்கார் ஒரு வேளை பணம் கொண்டுவரத் தவறிவிட்டால், நாம் கொடுக்கும் முன் பணம் போய்விடுமோ?

சாமா:- சரி; நல்ல பேச்சு! பணமில்லாமல் அவர் ஏன் வருவார்? சூரியன் தெற்கு வடக்காகப் போனாலும், அவர் சொன்ன சொல்லை மீறி நடக்கமாட்டார். அவர் நம்மைப்போல் நித்திய தரித்திரமா! (சாமாவையர் கண்ணைச் சிமிட்டிப் புன்னகை செய்துகொண்டு) ஆனால், இனிமேல் உங்களை நான் நித்திய தரித்திரமென்று சொல்லக் கூடாது. நீங்கள் பெருத்த பணக்காரராய்விட்டீர்கள். என்னைப் போல நித்தியத் தரித்திரமா என்று சொல்வதே சரியானது; பெருந்தேவியம்மாள் மோட்டார் வண்டி வாங்கி விட்டால், தினந்தினம் சவாரிதான்; தானும், தங்கையும், நாட்டுப் பெண்ணுமாக, ஊரை இரண்டாக்கி விட்டு வருவாள். அவளை அப்புறம் கையால் பிடிக்க முடியுமா? ஒரு நாளைக்கு நம்மை இந்த மோட்டார் வண்டியில் உட்கார வைப்பாளா? வைக்கவே மாட்டாள். கோமளம் எங்களோ டெல்லாம் பேசக்கூட மாட்டாள்; பெருமை யடித்துக் கொள்ளுவாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/239&oldid=1252415" இலிருந்து மீள்விக்கப்பட்டது