பக்கம்:மேனகா 2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

261

அடுத்த தடவை துரைஸானி வந்தபோது உங்களுடைய சட்டைப்பையிலிருந்த இரண்டு கடிதங்களைக் கொணர்ந்து மேனகாவினிடம் கொடுத்ததாகவும், அவற்றில் தான் நாடகக்காரனோடு ஒடிப்போய்விட்டதாக பொய் எழுதப்பட்டிருந்ததைக் கண்டவுடன் உங்களுடைய மனைவி விவரிக்க முடியாத ஆத்திரமும், விசனமும் அடைந்தவளாகவும் கூறினார். உங்களுடைய மனைவி தனக்கு இவ்வளவு அவமானமும் அபகீர்த்தியும் வந்த பிறகு, தான் உங்களுடைய முகத்திலேயே விழிக்கக் கூடாதென்று நினைத்துக் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு ஒருநாளிரவு அவருடைய பங்களாவை விட்டு ஒருவருக்கும் தெரியாமல் வெளியில் போய்விட்டார்களாம். பெரியதம்பி மரைக்காயர் பிறகு தமது ஆட்கள் பலரை விடுத்து கடற்கரை முதலிய இடங்களிலெல்லாம் தேடச் செய்தாராம். உங்களுடைய மனைவி அகப்படவில்லையாம். இந்த விஷயங்களை என்னிடம் தெரிவித்த மரைக்காயர், நாடகக்காரனால் எழுதப்பட்ட இரண்டு கடிதங்களையும், உங்களுடைய மனைவியால் கடைசியாக எழுதி வைக்கப்பட்ட துண்டுக் காகிதத்தையும் என்னிடம் கொடுத்து, அவற்றின் மேல் தக்க நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படிக்கும் தங்களுடைய மனைவியை இன்னும் தேடிப் பார்க்கும்படிக்கும் உத்தரவு செய்தார்; உங்களுடைய மனைவியின் அங்க அடையாளங்களை நான் நன்றாக அறிந்துகொண்டு பட்டணம் முழுவதிலும் தேடச் செய்தேன்; அவள் எங்கும் காணப்படவில்லை. துண்டுக் கடிதத்தில் காணப்பட்டபடி கடலில் விழுந்து இறந்து போய் விட்டாளோ வென்னும் சந்தேகமே எனக்குத் தோன்றுகிறது. நாடகக்காரனால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இரண்டு கடிதங்களையும், உங்கள் மனைவியால் எழுதப்பட்ட துண்டுக் காகிதத்தையும் இதில் இணைத்திருக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/262&oldid=1252438" இலிருந்து மீள்விக்கப்பட்டது