பக்கம்:மேனகா 2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழம் நழுவி பாலில் விழுந்தது

271

சந்தேகங் கொள்வேனென்று நினைத்தாயோ? நீ நேராக என்னிடம் வந்து உண்மையைச் சொல்லியிருந்தால், நான் கோபம் கொள்வேனா ஒருநாளும் கொள்ளமாட்டேனே! என்னுடைய உண்மையான பிரியத்தை உள்ளபடி அறியா மலல்லவா நீ இப்படிச் செய்து விட்டாய்! அடி! மேனகா! என் வாயில் மண்ணைப் போட்டுவிட்டாயே! இந்தச் சண்டாளர் செய்ததைக் காட்டிலும் நீ செய்ததே பெருத்த கொடுமையாக வதைக்கிறதே!” என்று பிரலாபித்துக் கண்ணீர் சொரிந்து விம்மி விம்மி அழுதான். தேற்றினும் தேறாமல் மிக்க பரிதாபகரமான நிலைமையிலிருந்து அவன் தவித்ததைக் காணச் சகியாமல் அந்த வெள்ளை மடவன்னம் பதறினாள். அவளது கண்கள் மழைபோலக் கண்ணீர் பெய்தன. அவள் அவனை மிகுந்த அன்போடும் பணிவோடும் குழந்தைபோலத் தடவிக் கொடுத்து, “விசனப்படவேண்டாம்; இது உங்களுடைய தேகத்துக்கு அவசியம் கெடுதல் செய்யும், நாங்கள் இத்தனை நாட்கள் பட்டபாடெல்லாம வீணாய்ப் போகும். உங்களுடைய சம்சாரம் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டது உண்மையானால், அவளுடைய பிரேதம் கரையில் ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும். அதைச் செம்படவர்கள் இதற்குள் எப்படியும் கண்டுபிடித் திருப்பார்கள். அப்படி ஒன்றும் நடக்கா திருப்பதால், அவள் உயிரை விட்டிருக்க மாட்டா ளென்று தோன்றுகிறது. நீங்கள் மோட்டார் வண்டியில் அறைபட்டு வைத்தியசாலையில் கிடந்ததை அவள் டாக்டர் துரைஸானியின் மூலமாக அறிந்ததாகத் தெரிகிறது. நீங்கள் இப்படிக் கிடக்கையில், அவள் உங்களை விட்டு இறந்துபோக நினைப்பாளா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. யாவற்றிற்கும் நீங்கள் இன்னும் மூன்று நான்கு நாட்கள் உடம்பை அலட்டிக் கொள்ளாமல் இருங்கள். அதற்குள் ஒருகால் உங்களுடைய சம்சாரத்தைப்பற்றி செய்தி ஏதாயினும் கிடைக்கலாம். இந்த விஷயங்களைப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/272&oldid=1252448" இலிருந்து மீள்விக்கப்பட்டது