பக்கம்:மேனகா 2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

மேனகா

தலையை வைத்துக்கொண்டு, உயிரை விட வேண்டுமென்பது அவருடைய கடைசி வேண்டுகோள். அந்தப் புண்ணியவதி அதை அவருடைய விருப்பின்படி நிறைவேற்றி வைத்தாள். அவருடைய புத்திரர் (வரதாச்சாரியாரின் தந்தை) நன்றாகப் படித்த மேதாவி; மகா வைதிகர்; தந்தை எவ்வளவுக் கெவ்வளவு தனலட்சுமியின் மீது வாஞ்சை வைத்தாரோ அவ்வளவுக் கவ்வளவு புத்திரர் ஊரிலுள்ள ஜனங்களின் மீது அன்பை வைத்து மகா குணசீலகுணமுடையவரென்று நற்பெயரெடுத்தார். அவரது காலத்தில் அரைவயிற்றுக்குப் போதுமான வருமானமுடைய நிலமும், பெரிய மாடி வீடு ஒன்றும் மிகுதியாய் நின்றன. எதை இழக்கினும் தமது மாடிவீட்டை மாத்திரம் இழக்க மனமற்றவராய் அவர் அதிலேயே குடியிருந்து ஊர் ஜனங்களால் ஆதரிக்கப் பெற்று, தமது காலத்தை நல்ல காலமாய்க் கடத்தினார். அவர் தமது புத்திரரான வரதாச்சாரியை வைதிகத் துறையிலேயே திருப்பிவிட எவ்வளவு பாடுபட்டாராயினும் அவர் பாட்டனாரின் குணத்தைக் கொண்டவரா யிருந்தார். அவர் தந்தைக்குத் தெரியாமல், கும்பகோணத்திற்குப் போய் இங்கிலீஷ் பள்ளிக் கூடங்களில் பயின்று, எண்ணிறந்த கெட்ட நண்பர்களின் தொடர்பினால், செய்யத்தகாத காரியங்களையெல்லாம் செய்து கெட்டலைந்து, பரீட்சைகள் ஒன்றிலேனும் தேறாமல் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். கிழவரது கடைசி விருப்பம் வரதாச்சாரிக்கு ஒரு பெண்ணைக் கலியாணம் செய்து வைத்துவிட்டுப் போக வேண்டு மென்பதாகும். அவர் விண்ணுலக மடைந்தார். புத்திர சிகாமணி, உலக விஷயம் யாவற்றையும் அறிந்தவரா யிருந்தார். ஆனால், எத்தகைய தொழிலையும் செய்து ஜீவனஞ் செய்ய வகையறியாது தவித்தார். தந்தையைப் போலப் பொருள்தேட அவர் வைதிகரல்லர்; வெளியூர்களில் சர்க்கார் உத்தியோகம் பெற, இங்கிலீஷில் தக்க திறமையும் பட்டப்பேறு மில்லை. ஆகையால், அவர் எதை போஜனஞ் செய்தார்? தம்முடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/28&oldid=1251841" இலிருந்து மீள்விக்கப்பட்டது