பக்கம்:மேனகா 2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280

மேனகா

வைத்ததாகவும், என்னை விட்டுப் பிரிய சகிக்க வில்லை யென்றும் சொன்னீர்களே! அப்படி யிருக்க, அவளுடைய ஸ்தானத்தில் என்னை ஏற்றுக்கொள்ளும்படி நான் வாய்விட்டுக் கேட்கவும் வேண்டுமா? அந்தப் பாக்கியத்தைப் பெறுவதற்கு என்னைக் காட்டிலும் உயர்வானவள் எவளிருக்கப் போகிறாள்! என்னைக் காட்டிலும் அதிகமாக உங்களைக் காதலிப்பவள் மேனகாவுக்குப் பிறகு வேறு ஒருத்தியும் இருக்கமாட்டாளென்பது நிச்சயம். உங்களுடைய ஆபத்துக் காலத்தில் என்னைத் துணையாக வைத்துக் கொள்ள இணங்கின நீங்கள், உங்களுடைய சந்தோஷ காலத்திலும் என்னைத் துணையாக ஏற்றுக்கொள்வதே நியாயமல்லவா?” என்றாள்.

எதிர்பாராத அவளது சொல்லைக் கேட்ட வராகசாமியின் மனம் குழம்பியது; அவன் பெரிதும் வியப்படைந்தவனாய் தனது செவிகள் கேட்டது உண்மைதானோ வென்று சந்தேக மடைந்தான்; ஒருகால் அவள் வேசையோ என்றும், தான் அவளை உத்தமியென்று நினைத்தது தவறோ என்றும் நினைத்தான். ஒரு வெள்ளைக்காரி இந்திய ஜாதியனைக் கலியாணம் செய்து கொள்ள எளிதில் விரும்ப மாட்டாள் ஆகையால், அவள் திருட்டு நட்புக்கு ஆசைப்படுகிறா ளென்றும், அவள் ஒரு வேசையென்றும், அவன் அவளிடம் கொண்ட அன்பினால் அதை மறைத்து, “நீ கூட என்னைப் புரளி செய்ய ஆரம்பித்து விட்டாயா? என்னுடைய உயிர்போகும் நிலைமையில் காப்பாற்றிய மகா பேருபகாரியும் உத்தமியாகிய நீயே என்னிடம் பரிகாசமாகப் பேசி என் மனதை வருத்த நினைத்தால், நிச்சயமாக இது எனக்குப் பொல்லாத காலமென்பதற்குத் தடையே இல்லை; இதைவிடக் கெட்ட காலம் எனக்கு இனி நேரப் போகிறதே இல்லை” என்று மிகவும் வருந்திக் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/281&oldid=1252458" இலிருந்து மீள்விக்கப்பட்டது