பக்கம்:மேனகா 2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

27

வீட்டிலேயிருந்து வீட்டையே போஜனஞ்செய்ய ஆரம்பித்தார். வீட்டை அடமானம் வைத்து, பணத்தில் ஒரு பாகத்தை வைத்துக் கொண்டு வெளி வேஷம் போட ஆரம்பித்தார். அவரது ஆசையோ ஆகாயத்தை அளாவியது. தாம் ஏழை யென்பதை அவர் நம்பவே இல்லை. பிறர் அவ்வாறு குறித்துக் கூறியதையும், அவர் கடுமையாகக் கண்டித்து வந்தார். ஆகையால், அவருக்கு அவ்வூரார் எத்தகைய சிறிய உதவியும் செய்ய முன் வரவில்லை. தாம் பெரிய அகத்து வரதாச்சாரியார் என்பதை அவர் மறக்கவே இல்லை. அவர் பெரிய அகத்தில் குடியிருந்ததன்றி, அவர் மனதிலும் பெரிய அகம் குடிகொண்டிருந்தது. அவர் எப்போதும், ஒரு சாண் அளவு அகன்ற ஜரிகையுள்ள வஸ்திரங்களை அணிவார். வெள்ளிப் பூண் கட்டப்பட்ட வழுவழுப்பான கருங்காலித் தடி யொன்றும், இங்கிலீஷ் சமாச்சாரப் பத்திரிகையும் அவரது கையில் எப்போதும் இருந்தன. காலில் உயர்ந்த ஜோடு அணியாமல் காலைக் கீழே வைக்க மாட்டார். அவருடைய சிவப்புத் தோலும் மடிப்புத் தொந்தியும் அவர் பெரிய மனிதர் என்று பொய் சாட்சி கூறின. அவர் எதைச் சொன்ன போதிலும் அழுத்தந் திருத்தமாகவும், அதற்குமேல் அப்பீலில்லை யென்று நினைத்தும் பேசுவார். அவர் இங்கிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் முதலிய தேசங்களின் விஷயங்களைப் பற்றிப் பேசுவாரன்றி, சென்னை கும்பகோணம் முதலிய ஊர்களின் செய்தியைப் பேசுதல் தமக்குச் சிறப்பல்லவென்று கருதினார். அவரது உண்மை மதிப்பை உள்ளபடி உணர்ந்த அவ்வூர் ஜனங்களிடம் அவரது சரக்கு அதிகமாக விற்பனையாக வில்லை. ஜனங்கள் அவரை வரதாச்சாரி யென்பதற்குப் பதிலாக டம்பாச்சாரி என்ற பெயரால் குறித்தனர்.

அவருக்கு வாய்த்த மனைவியோ, அவரைவிடப் பதின்மடங்கு தேர்ச்சிபெற்ற பகல் வேஷக்காரியாயிருந்தாள். அவள் எப்போதும் வாசற் கதவைச் சாத்தித்தாளிட்டுக்கொண்டு உட்புறத்திலேயே இருப்பாள். அயல் வீட்டுப் பெண்டீர், “ஏன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/29&oldid=1251842" இலிருந்து மீள்விக்கப்பட்டது