பக்கம்:மேனகா 2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

மேனகா

காக்கை உட்கார்ந்ததும் பனம்பழம் விழுந்ததும் ஒத்ததைப் போல தமது குற்றம் வெளியான அதே நிமிஷத்தில் நாடகக் காட்சியைப் போல போலீஸார் வந்ததைக் கண்ட பெருந்தேவி, கோமளம், சாமாவையர் ஆகிய மூவருக்கும் அடி வயிற்றில் நெருப்பு விழுந்தது. போலீஸார் தம்மைப் பிடித்துக் கொண்டு போகவே வந்திருப்பதாக அவர்கள் நினைத்து விட்டனர். பேரச்சத்தினால் அவர்களது தேகங்கள் முற்றிலும் வியர்த்து வெடவெடவென்று நடுங்கின; அசைவற்று நடைப் பிணங்களைப்போலச் செயலற்று நின்றனர். அவர்கள் எதற்காக அப்போது வந்தார்களோ வென்று பெரிதும் வியப்பும், திகைப்பும் அடைந்த வராகசாமியோ படுக்கையை விட்டு நிமிர்ந்து உட்கார்ந்து, “சஞ்சீவி ஐயர்வாள்! வாருங்கள், வாருங்கள்; இந்த நாற்காலியில் உட்காருங்கள்” என்று மிகுந்த அன்போடு வரவேற்று சற்று துரத்திலிருந்த ஒரு நாற்காலியைக் காட்டி உபசரித்தான். தனது விஷயத்தில் தெய்வம்போலத் தோன்றி பெரிதும் உழைத்துத் தனது கற்பை நிலை நிறுத்திய மகாநுபாவர் அவரே என்பதை ஒரு நொடியிற் கண்டு கொண்ட பெண்மணியான மேனகா உடனே விரைவாக நடந்து சற்று துரத்தில் கிடந்த ஒரு நாற்காலியை எடுத்து வந்து வராகசாமிக் கருகில் போட்டு விட்டு அப்பாற் சென்றாள். அவளது நடையுடை பாவனைகள் அவளது மனதில் பொங்கி எழுந்த நன்றியறிவின் பெருக்கை ஆயிரம் நாக்குகள் கொண்டு வெளியிட்டு அவ்ருக்கு மனப்பூர்வமான வந்தனம் செலுத்துவதைப்போலத் தெற்றெனக் காண்பித்தன. அவளே மேனகா வென்பதை நுட்பமாக உணர்ந்து கொண்ட சஞ்சீவி ஐயர் பரம சாதுவும் குற்றமற்றவளுமான அந்தக் கற்புக்கரசி அப்போதடைந்த பிரம்மானந்தமே, தாம் அவள் பொருட்டு எவ்வளவோ பாடுபட்டு முயற்சிகள் செய்ததற்குப் போதுமான கைமாறென நினைத்து மனங்கொள்ளா மகிழ்ச்சியை அடைந்தார். என்றாலும், அவர்தமது முகக்குறியை முற்றிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/299&oldid=1252475" இலிருந்து மீள்விக்கப்பட்டது