பக்கம்:மேனகா 2.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

மேனகா

கடிதத்திலிருந்து தாங்கள் அறிந்து கொண்டிருக்கலாம். எஜமானர் கடன் வாங்கிவந்த பணம் முற்றிலும் போய்விட்ட தென்றே அப்போது நான் நிச்சயித்துக் கொண்டேன். அவரைப் போலீஸார் தேடியபடியால், நான் வீணில் அங்கே காத்திருப்பதில் பயனில்லை யென்று நினைத்தேன். பணமில்லாமையால் ஆபரேஷனின்றி எஜமானி யம்மாளின் உயிர் போய்விடுமோ வென்று மிகவும் அச்சமும் கவலையுங் கொண்டவனாய் நான் உடனே தஞ்சாவூருக்குப் போய் பணத்திற்கு ஏதாவது ஏற்பாடு செய்ய நினைத்தேன்; எஜமானரைத் தேடிப் பிடித்துப் பட்டணத்தில் நீங்களிருக்கும் சத்திரத்தில் கொண்டு ஒப்புவிக்கும்படி போலீஸாரிடம் கேட்டுக் கொண்டேன்; எஜமானருடைய உத்தியோகம், அங்க அடையாளங்கள் முதலியவற்றை விரைவாக அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்களும் மிகுந்த இரக்கமும் விசனமும் அடைந்தனர்; எஜமானரை மிகுந்த சிரத்தையோடு தேடிப் பிடித்துக்கொண்டு போய் ஒப்புவிப்பதாக போலீஸார் எனக்கு வாக்குறுதி செய்தனர். நான் உடனே ரயிலேறி தஞ்சாவூருக்குப் போனேன். பணத்தை எப்படியாவது சேகரம் செய்தனுப்ப வேண்டுமென்று என்னாலானவரையில் முயன்று பார்த்தேன்; நான் பரம ஏழை யென்பது தங்களுக்குத் தெரிந்த விஷயம். நான் இருக்கும் வீடோ வாடகை வீடு. வீட்டிலுள்ள பாத்திரங்களோ மண் பாத்திரங்கள்; என்னுடைய பெண்டாட்டியின் காது மூக்குகளில் வெறுந் துளைகளே ஆபரணங்களா யிருக்கின்றன. அவ்வளவு பெருத்த பிரபுவாகிய எனக்கும் இரு நூறு ரூபாய்க்கும் எவ்வளவு தூரம் எனக்கு இந்த உலகில் இருபது காசு கூட பெறுமானமில்லை. கடன் வாங்கலாமென்று நினைத்து பலரிடம் போய் முயன்று பார்த்தேன். அவர்கள், உதவியற்ற பொன்னையும், வெள்ளியையும், மண்ணையும், கல்லையும் மதிக்கிறார்களே யன்றி உபயோகப்படும் மனிதனாகிய என்னை ஒரு பைசாவுக்கும் மதிக்கவில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/309&oldid=1252485" இலிருந்து மீள்விக்கப்பட்டது