பக்கம்:மேனகா 2.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

328

மேனகா

விரிக்கப்பட்ட சுத்தமான தரையில் கோமளாங்கியான மேனகா உட்கார்ந்துகொண்டு, வராகசாமியின் காலை எடுத்துத் தனது மடியின்மீது வைத்துக்கொண்டு விரல்களோடு ஏதோ விஷமம் செய்துகொண்டும், அவனை நோக்கி சல்லாப வார்த்தைகளை மொழிந்துகொண்டும் இருந்தாள். அன்பும், பணிவும் வடிவெடுத்த இன்பக் களஞ்சியமென உட்கார்ந்திருந்த அந்தப் பெண் பாவையின் மேனி முழுதிலும் வைரங்கள் நட்சத்திரங் களைப்போல சுடர்விட் டெரிந்தன. அவ்விரு யெளவனப் பருவத்தினரும் விண்ணுலகத்தைச் சார்ந்த கந்தருவ வகுப்பாரோ வென ஐயுறும்படி அற்புத ஜோதியாக விளங்கினர். அவர்கள் எவ்விதமான துன்பத்தையும் அடையாதவரைப்போல முழு மகிழ்வடைந்தவராகக் காணப் பட்டனர். மேனகாவின் வனப்போ முன்னிலும் ஆயிரம் மடங்கு அதிகரித்துத் தோன்றினதாயினும், அவளது நடத்தை மாத்திரம் மாறுபடாமலே இருந்தது. அதற்குமுன் அவள் தனது கணவனோடிருக்கையில் குதுகலமாகவும், ஹாஸ்யமாகவும், அடிக்கடி பேசி, அவனை மகிழ் விக்க முயலுவாள். இப்போதோ, எதிர்பாராத பெருத்த விபத்திற்பட்டு மீண்ட பிறகு, அவள் ஹாஸ்யமாகப் பேசுவதையே அடக்கிக் கொண்டாள். ஏனெனில் தன்னை தனது கணவன் பெருத்த ஸாகவஸி என்ற நினைத்துவிடுவானோ என்ற அச்சத்தினால் அவ்வாறு தனது நடத்தையை மாற்றிக் கொண்டாள். எப்போதும், அவனிடம் பணிவு, அந்தரங்கமான வாஞ்சை, கபட மின்மை, மனதிற் குகந்தவிதம் ஒழுகுதல் முதலிய குணங்களையே கொண்டவளாய், நாராயணனோடு கூட இருந்து அவனுக்குத் தேவையானவாறு அமைந்து சுகங் கொடுக்கும் ஆதிசேஷனைப்போலவும், உயிரோடு ஒன்றுபடும் உடல் போலவும், உடலோடு பொருந்தி நிற்கும் நிழல் போலவும் அவள் தனது கணவனிடம் ஒழுகினாள். அவளை வராகசாமி மனதென்றே சொல்லலாம். அவனுக்கு எது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/329&oldid=1252781" இலிருந்து மீள்விக்கப்பட்டது