பக்கம்:மேனகா 2.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டம்பாச்சாரி விலாசம்

31

நினைக்கவில்லை. அந்த இரகசியத்தை அறியாத அயலூரார் எவரேனும் பெண்ணைப் பார்க்க வருவாராகில் உடனே விஷயம் அவரது காதிற்கு எட்டிவிடும். வந்த வண்டியிலேயே திரும்பிப் போய்விடுவர். அவ்வூர் ஜனங்கள் இந்த உண்மையை யறிந்திருந்தன ரென்றாலும் வரதாச்சாரியார் அவர் மனைவி ஆகிய இருவரின் செருக்கையும் வேஷத்தையும் கண்டு மிகவும் அருவருப்பைக் கொண்டு, அவர் விஷயத்தில் பலவாறு புரளி செய்யத் தொடங்கினர். பிரவிடையான பெண்ணை அவர்கள் கலியாணம் செய்து கொடுக்காமல் வைத்துக்கொண்டிருப்பதாகப் பறையடிப்பதுபோல, ஒயாமல் அதையே கூறி, அவர்களை ஜாதியைவிட்டு விலக்கி வைத்தனர். எவரும் அவர்களது வீட்டிற்குப் போவதையும் நிறுத்திவிட்டனர். ஊரில் நடக்கும் நன்மை தீமைகளுக்கு அவரை அழையாமலும், அவரைப் பந்தியில் வைத்துக் கொண்டு போஜனம் செய்யாமலும் ஒதுக்கி விட்டனர்.

அந்த அவமானத்தைப் பொறாமல், அவர் அவ்வூரை விட்டு, கும்பகோணத்தில் வந்து குடியேறினார். நமது சாமாவையர் இந்தக் குடும்பத்திற்கு அநுகூலமான நண்பராதலால், அவர் வரதாச்சாரியாருக்கு ஒரு உத்தியோகமும் செய்து வைத்தார். என்ன உத்தியோகம்? சாமாவையருடைய எஜமான் நைனா முகம்மதுவின் கம்பெனியில் சீமைத்துணிகள் வியாபாரம் நடத்தப்பட்டது என்பதை இவ்விடம் குறிக்க வேண்டியிருக்கிறது. அந்தக் கம்பெனிக்கு வரதாச்சாரியார் கும்பகோணத்துக்கு பிரதி நிதியாக (ஏஜென்டாக) நியமிக்கப் பட்டார். அதற்குச் சம்பளம் கிடையாது. எந்த வியாபாரிகளாயினும் துணிகள் தேவை யானால், அந்த உத்தரவை வரதாச்சாரியார் வாங்கி சென்னைக்கு அனுப்பினால், அதில் நூற்றுக்கு ஐந்து ரூபாய் வீதம் அவருக்கு லாபம் கிடைத்தது. அதில் மொத்தத்தில் மாதம் முப்பது ரூபா வரையில் வந்து கொண்டிருந்தது. வரதாச்சாரியார் அத்துடன் நிற்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/33&oldid=1251846" இலிருந்து மீள்விக்கப்பட்டது