பக்கம்:மேனகா 2.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

மேனகா

பேசியதையும், தனது வீட்டிற்கு வரும்படி அழைத்ததையும் காண, அவர் தம்மைப்போன்ற பாக்கியவான் இவ்வுலகில் வேறு எவனும் இருக்க மாட்டானென்று நினைத்து, நேரில் பரமபதம் அடைந்தவரைப்போலானார். அந்த மின்னாள் தமது அழகைக் கண்டு தம்மீது மோகங்கொண்டிருக்கிறாள் என்றும் நினைத்து விட்டார்; உடனே அவளது கையைப் பிடித்துக் கொள்ளலாமா வென்றும், அப்படியே பாய்ந்து கட்டிப்பிடித்து அவளை ஆலிங்கனஞ் செய்து கொள்ளலாமோ வென்றும் நினைத்துத் துடித்தார். ஒருகால் அவள் கூச்சலிடுவாளோ வென்றும் அஞ்சினார். அவள் தம்மை வீட்டிற்கு வரும்படி அழைத்தது சாதாரணமான பரோபகாரச் சிந்தையினால் இருக்குமோ வென்று நினைத்தார். ஆனால், தமது கால் அவள் காலில் படுவதையறிந்தும் அவள் அதை இழுத்துக்கொள்ளாம லிருந்ததே அவருக்கு ஒரு விதமான துணிவை உண்டாக்கியது. உடனே ஐயர் புன்சிரிப்போடு, “யார் இப்படி உதவி செய்யப் போகிறார்கள்! நீ சொன்னபடியே உன்னுடைய வீட்டுக்கே வருகிறேன். உங்கள் வீட்டில் வேறு யார் இருக்கிறார்கள்?” என்றார்.

கமலம் புன்னகை தவழ்ந்த முகத்தோடு, “என் தாயார் மாத்திரம் இருக்கிறாள். வேறு ஒருவருமில்லை. நீங்கள் சுகமாக இருந்து வரலாம்” என்று கூறி நெடுமூச் செறிந்தாள்: அவளுடைய மார்பு விம்மித் தணிந்தது.

அப்போது ஏராளமான மூட்டைப் பூச்சிகள் கடித்து வருத்தின வாகையால், அவர் எழுந்து நின்று கீழே குனிந்து பலகையைப் பார்த்தார். அப்போது அவளது பட்டுச்சேலை அவர்மீது வருடியது அவருக்குப் பிரம்மாநந்த மாயிருந்தது. பிறகு அவர் உட்கார்ந்து கொண்டு, “இந்த மூட்டைப் பூச்சிகள் என்னை மாத்திரம் கடிக்கின்றனவே” என்று உற்சாகத்தோடு பரிகாசமாகக் கூறினார். அவள் அதற்குப் பின்வாங்கியவளன்று;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/63&oldid=1251898" இலிருந்து மீள்விக்கப்பட்டது