பக்கம்:மேனகா 2.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

மேனகா

யாரென்பதை நானும் அறிந்து கொள்ளவில்லை. நான் யாரென்பதை நீங்களும் கேட்கவில்லையே. இது வேடிக்கையல்லவா. இதுதான் உண்மையான காதல், இதைத்தான் கண்டதும் காதலென்று கவிகள் வருணிப்பது இருக்கட்டும். இப்போதாவது விவரத்தை அறிந்து கொள்வோம். தங்களுடைய ஊர் எது? தங்களுடைய திருநாமம் என்ன? இவற்றையெல்லாம் சொல்லலாமா?” என்றாள்.

சாமா:- ஆகா! அவசியம் சொல்லுகிறேன். நான் சென்னப் பட்டணத்தில் ஒரு பெருத்த வியாபாரி; என் பெயர் சாமாவையர் என்பார்கள்.

கமலம்:- தாங்கள் பெருத்த வியாபாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை நான் பார்வையிலேயே அறிந்து கொண்டேன். அதெல்லாம் இருக்கட்டும். இன்னொன்று கேட்கிறேன்; உண்மையைச் சொல்லு வீர்களா ? - என்று குழந்தையைப்போலக் கொஞ்சினாள்.

சாமா :- ஆகா! நீ எதைக் கேட்டாலும், அதை அவசியம் உள்ளபடி சொல்லுகிறேன்.

கமலம்:- தங்களுக்குக் கலியாணம் ஆய்விட்டதா?... என்று மிகவும் இழுத்துக் கொஞ்சிக் கேட்டாள்.

சாமாவையர் சிறிது தடுமாற்ற மடைந்தாராயினும், துணிவுகொண்டு, “கலியாணம் ஆனாலென்ன? அதைப்பற்றி நமக்கென்ன கவலை? தாலி கட்டுகிறவ ளெல்லாம் ஆசைநாயகி ஆய்விடுவாளா? இப்போது எனக்கு மனைவியா யிருப்பவள் சமையல் செய்துபோட உபயோகப்படுகிறாள். உண்மையான ஆசையோடு புருஷன் பெண்ஜாதியாக இருந்து சந்தோஷமடையத் தகுந்த மனைவியை நான் இன்னம் கலியாணம் செய்து கொள்ளவில்லை. அந்தப் பாக்கியம் இன்று தான் கிடைக்கப் போகிறது” என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/77&oldid=1251914" இலிருந்து மீள்விக்கப்பட்டது