பக்கம்:மேனகா 2.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயசஞ்சீவி ஐயர்

83


மேனகாவைப் பற்றியும் பெருத்த கவலைகொண்டு தமது மனதை முற்றிலும் அதே விஷயத்தில் செலுத்தினார்: கவரிமானிலும் சிறந்த மானத்தையும், புருஷனிடம் வைத்த காதலையும் கொண்டவளான தமது புதல்வி தன் உயிருக்கு ஏதேனும் தீங்கு செய்து கொள்வாளோவென நினைத்தவராய், தாம் மூன்று நாட்கள் வரை துரைத்தன உத்தியோக சாலைக்கு வரக்கூடவில்லை. ஆகையால், தமது உத்தரவுபெற வேண்டிய காகிதங்களைப் பங்களாவுக்கே அனுப்பும்படி கவர்னருக்குச் செய்தியனுப்பினார். நூர்ஜஹானை பந்தோபஸ்தாக பாதுகாத்து அவள் மீதிலேயே கண்ணாக இருந்தார். தாம் நேரிலும் தமது முதிய புத்திரியின் மூலமாயும், அவளுக்குத் தேவையான ஆறுதல்களைச் சொல்லி வந்தார்.

சாம்பசிவம், கனகம்மாள் ஆகிய இருவரும் சென்னைக்கு வந்து பல துன்பங்களிற் பட்டு, தஞ்சைக்குத் திரும்பச் சென்ற அன்றைய தினம் இரவு எட்டு மணி நேரமாயிற்று; பெரியதம்பி மரக்காயர் தமது பங்களாவின் மேன்மாடியிலிருந்த ஒரு சிங்காரமான அறையில் சோபாவின்மீது உட்கார்ந்திருந்தார்; பெருத்த ஹுக்கா வொன்று நெடுந்துரத்திற்கப்பால் இருந்தது. பட்டுத் துணியால் அமைக்கப்பட்ட அந்த ஹாக்காவின் காம்பு அநுமாரின் வாலைப்போல வளர்ந்து சுருண்டு சுருண்டு அவரிருந்த சோபாவிற்கு வந்திருந்தது; பங்களாவிலிருந்த சம்பங்கி, ரோஜா, முதலிய புஷ்பங்களின் பரிமள காந்தத்தைச் சுமந்து உட்புறம் நுழைந்து வீசிய கடற்காற்றின் இனிமை யினால் பரவச மடைந்திருந்த மரக்காயர், அப்போதைக்கப் போது ஹாக்காவின் காம்பை வாயில் வைத்துக்கொண்டு குடுகுடு குளுகுளு குடுகுடு குளுகுளு வென்று ஒசை செய்து, பிரம்மாநந்த சாகரத்தில் மிதந்து கொண்டிருந்தார். அவருடைய கண்கள் சொக்கிப்போய் ஆநந்த சாகரத்தில் நீந்துவன போலத் தோன்றின; வெளித் தோற்றத்திற்கு அவர் இன்பத்தில் ஆழ்ந்திருப்பதாய்த் தோன்றினும், உண்மையில் அவர் மனது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/84&oldid=1251933" இலிருந்து மீள்விக்கப்பட்டது