பக்கம்:மேனகா 2.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணங்கோ ? ஆய்மயிலோ ?

7

அப்போதே போனாளென்பதையும் தெரிவித்தாள். அம் மூவரும் தன்னைக் காப்பாற்றும் பொருட்டு செய்த காரியங்களை யெல்லாம் கேட்ட மேனகாவின் மனதிலெழுந்த நன்றியறிவின் பெருக்கை எப்படி விவரிப்பது! அவளது கண்கள் கண்ணிரைப் பெருக்கின. வாய்பேசா மெளனியாய் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளது அதிகரித்த சந்தோஷம் திடீரென்று துக்கமாக மாறியது. முகம் மாறுபாடடைந்தது. அதைக்கண்ட நூர்ஜஹான், “ஏனம்மா விசனப்படுகிறாய்? உன் விஷயத்தில் நாங்கள் ஏதாயினும் தவறு செய்தோமா? எங்கள் மேல் கோபமா?” என்றாள்.

அதைக் கேட்ட மேனகா, "ஆகா! மகா பேருபகாரிகளான உங்கள் மேல் கேவலம் சண்டாளகுண முடையோர்களே கோபங்கொள்வார்கள். நான் அதை நினைக்கவில்லை. நீங்கள், என் கற்பையும் என் உயிரையும் காத்தது எனக்கு ஒப்பற்ற பெரிய உதவி யென்று செய்தீர்கள். ஆனால், இன்னொரு காரியம் செய்திருந்தீர்களானால், அது எல்லாவற்றிலும் மேலான பரம உதவி யாயிருக்கும். என்னுடைய கற்பை மாத்திரம் காப்பாற்றியபின், என்னை மூர்ச்சை தெளிவிக்காமல், அப்படியே இறந்துபோக விட்டிருந்தால், ஆகா! அந்த உதவிக்கு இந்த உலகம் ஈடாயிராது. ஆனால், அந்த உதவியைப் பற்றி நன்றி கூற நான் உயிருடனிருந்திருக்க மாட்டேன்; என்னுடைய ஜீவன் மாத்திரம், எத்தனை ஜென்மமெடுத்தாலும் உங்களை மறந்திராது. இத்தனை நாழிகை எனது உயிர் இவ்வுலகத்தின் விஷயங்களை மறந்து எங்கேயோ சென்றிருக்கும். எனது கற்பு அழியாமல் காப்பாற்றப்பட்டதைப்பற்றி நான் அடைந்த இன்பத்தைக்காட்டிலும், என் கணவனை விட்டுப் பிரிந்ததால் இனி நான் அநுபவிக்க வேண்டியிருக்கும் நரக வேதனை எனக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. அதைக் குறித்த துயரம் இப்போதே மேலிட்டு வதைக்கத் தொடங்கிவிட்டது. நான் என்ன செய்வேன்?” என்று கூறிப் பரிதவித்தவளாய் தனது கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தாள். திரும்பவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/9&oldid=1251471" இலிருந்து மீள்விக்கப்பட்டது