பக்கம்:மேனகா 2.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மேனகா

அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று சொன்னதாகவும் கூறினாள். மரக்காயர், “அவரைக் கச்சேரி மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டு வா!” என்று கூறி அவளை அனுப்பிவிட்டு, எழுந்து வெளியிற்சென்று தாம் கச்சேரி செய்யும் உத்தியோக மண்டபத்திற்குப் போய் நாற்காலியில் அமர்ந்துகொண்டார். அடுத்த நிமிஷம் சமய சஞ்சீவி ஐயர் தோன்றி மரக்காயருக்கு வணக்க வொடுக்கமாக சலாம் செய்து மரியாதையாக நின்றார். உடனே மரக்காயர் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளும்படி அன்போடு ஐயரை உபசரிக்க, அவர் மிகவும் தயங்கி கடைசியில் ஒரு விசிப்பலகையின்மீது உட்கார்ந்துகொண்டார். மரக்காயர், சென்னைத் துரைத்தனத்தில் யாவற்றையும் படைத்துக் காத்தழிக்கும் மும்மூர்த்திகளான பெருந் தெய்வங்களில் ஒருவராதலால், அற்ப உத்தியோகஸ்தரான தம்மை அவர் அவ்வளவு தூரம் மதித்து அழைப்பதன் காரணமென்னமோ வென்று ஐயமுற்று சஞ்சீவி ஐயர் பெரிதும் கலக்கமும், அச்சமு மடைந்து வந்திருந்தார்; தாம் ஏதாகிலும் குற்றம் செய்து விட்டோமோ என்று கவலைகொண்டார். அப்படி யிருந்தால் தமது மேலதிகாரியின் மூலமாக வன்றோ அத்தகைய உத்தரவு அனுப்பப்பட வேண்டுமென்று நினைத்து, குழப்பமும் பலவாறான சஞ்சலங்களையும் அடைந்து மரக்காயர் எந்த விஷயத்தைப் பற்றி பேசப்போகிறாரோ வென்று ஆவல் கொண்டு, அவரது வாயைப் பார்த்தவண்ணமிருந்தார்; முதலில் அவர் தம்மைக் காணும்போதே தம்மீது விழுந்து கடிந்து விடப் போகிறாரென்று நினைத்து வந்தார். ஆனால், அவர் தம்மை நாற்காலியில் அமரும்படி அன்போடு உபசரித்ததைக் காண, சஞ்சீவி ஐயரின் மனது ஒருவாறு அமரிக்கை யடைந்தது. என்றாலும், அவ்வளவு உயர்வான பதவியிலிருக்கும் பெரிய மனிதர் தம்மை ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தின் பொருட்டே வரவழைத்திருக்க வேண்டுமென்று நினைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேனகா_2.pdf/93&oldid=1251963" இலிருந்து மீள்விக்கப்பட்டது