பக்கம்:மேரியின் திருமகன்.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

காட்டில் மேய்ந்தது ஒரு ஆட்டு மந்தை
ஆடுகளில் ஒன்று வழி தவறிற்று, மேய்ப்பவன்
நூற்றில் ஒன்று குறைந்ததற்கு வருந்தினான்
காணாத ஒன்றைக் காடெல்லாம் தேடினான்
அவன் குரலைக் கேட்டு ஆடு வந்தது
மகிழ்ச்சிப் பெருக்கில் சுமந்து வந்தான்
காணாத மறியினும் மனிதன் கேடானவனோ
தவறை உணர்ந்ததால் தந்தை மன்னிக்கிறார்
தனயன் நான் அவர் கருத்தை நடத்த வந்தேன்
இன்னும் கேள், ஒரு செல்வனுக்கு இரண்டு பிள்ளை
அண்ணன் அப்பனுக்கு உகந்தபிள்ளை
தம்பி தறுதலை தந்தைக்கு அடங்குவதில்லை
சூதாடுவான் வாதாடுவான் சொத்தில் பங்குபெற்றான்
ஆடம்பர வாழ்வில் அனைத்தும் தோற்றான்
சொத்தும் தீர்ந்தது சோற்றுக்கு வழியில்லை
பஞ்சம் வந்தது பன்றி மேய்த்தான்
இளைத்தான் களைத்தான் தந்தையை நினைத்தான்
வருவதற்கு வெட்கினான் வந்துவிட்டான்
மாண்டவன் மீண்டதற்கு மகிழ்ந்தார் தந்தை
பகைமை அகன்றது. பாசம் பெருகிற்று
அவனுக்கு அணியும் மணியும் பூட்டினார்
கொழுத்த கன்றை விருந்து வைத்தார்
உடன் பிறந்தவன் ஒதுங்கி நின்றான்
விருந்தின் ஆரவாரத்தை வெறுத்தான்
தந்தை அறிந்து தனையனை அழைத்து
ஏனடா மகனே ஏனிந்தப் புறம்பு ? என்றார்