பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



18

மைக்கேல் காலின்ஸ்


கொண்டாள். இக் காதலரிடையே வயதும் பருவமும் வேற்றுமையையும் விகற்பத்தையும் உண்டாக்கவில்லை. மேரி பசுமையும் அழகும் கொண்டு, நாயகருக்குப் பேருதவியாய் வாழ்ந்துவந்தாள்.

இந்தத் தம்பதிகளுக்கு எட்டுக் குழந்தைகள் பிறந்தார்கள். எட்டாவது குழந்தைதான் இச்சரித்திரத்தின் வீரனான மைக்கேல் காலின்ஸ். 1890-இல் பிறந்த இக்கடைசிக் குழந்தைக்குத் தந்தையின் பெயரே வைக்கப்பட்டது. குழந்தைகள் யாவரும் திடகாத்திரமும் புத்திக் கூர்மையும் பெற்றிருந்தார்கள். காலின்ஸ் கடைசிக் குழந்தையாதலால் பெற்றோருடைய அன்பையும், உடன் பிறந்தோர் வாஞ்சையையும் கொள்ளைகொண்டு வாழ்ந்தான். அவன் அழகும் குணமும் ஒருங்கே அமையப் பெற்றிருந்ததால், அவனுடைய மூத்த சகோதரிகள் அவனைக் கவலையுடன் கவனித்து வந்தனர். வேறு எந்தக் குழந்தைக்கேனும் அவ்வளவு அன்பு காட்டப்பட்டிருந்தால், அது பின்வாழ்க்கையில் பயனற்றுப் போயிருக்கும்.

நாலரை வயதில் காலின்ஸ் சுவடிகளைத் தூக்கிக்கொண்டு தேசியப் பள்ளிக்கூடத்திற்குச் சென்றான். அவனுடைய உபாத்தியாயர் 'ஐரிஷ் குடியரசுச் சகோதரத்துவ சங்க'த்தைச் சேர்ந்தவர். அவர் அயர்லாந்து பூரண சுதந்திரம் அடையவேண்டும் என்ற நோக்கமுடையவர். அவ்வாசிரியரிடம் கல்வி பெற்றது காலின்ஸின் பாக்கியமேயாகும். அவர் 'அடியாத மாடு பணியாது' என்ற கொள்கையுடையவர். என்றைக்குக் குழந்தைகளை அடிப்பதை நிறுத்துகிறோமோ அன்று முதல் உலகம் பாழாகும் என்று கருதும் பழைய ஆசிரியர் கூட்டத்தைச் சேர்ந்தவர். எனினும்,