பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளமைப் பருவம்

23


வேண்டும் என்று அவன் உறுதிகொண்டான். ஆனால், அவன் ஸிவில் ஸெர்விஸ் பரீட்சைகளுக்குப் படிக்க வேண்டியிருந்ததால், தாய்ப் பாஷையைக் கற்பதற்குப் போதிய ஓய்வு கிடைக்கவில்லை. ஐரிஷ் பாஷையான கெயிலிக் மொழியைப் பேசக்கூடிய ஒரு ஜில்லாவில் தங்கி அப்பாஷையில் பாண்டித்யம் பெறவேண்டும் என்பது அவனுடைய பேராவல். வாழ்நாள் முழுதும் போர்க் களத்திலே நின்று போராடவேண்டிய இந்த இளைஞன், இளமையில் தாய்மொழியைக் கற்க முடியாமல், பின்னால் கற்றுக்கொள்ள நேரம் எப்படிக் கிடைக்கும்! ஆனால், பிற்காலத்தில் அவன் மன்னர் பிரானின் விருந்தினனாய்ச் சிறைக்கோட்டம் புகுந்த காலத்தில், தாய்மொழியைக் கொஞ்சம் கற்பதற்குச் செளகரியம் கிடைத்தது.

விளையாட்டுகளிலும் அந்நிய முறைகளே ஒழித்துவிடவேண்டும் என்பது அவன் எண்ணம். அவனும் அவன் நண்பர்களும் அமைக்கும் விளையாட்டுச் சங்கங்களிலே அந்நியச் சங்கங்களில் அங்கத்தினராயிருந்தவர்கள் சேரமுடியாது என்று விதி செய்தான். ஆங்கிலேயர் பந்தாடும் முறையைக்கூட ஐரிஷ் வாலிபர் பின்பற்றக் கூடாது என்று அவன் போராடி வந்தான்.

அக்காலத்தில் அயர்லாந்தின் பூரண சுதந்திரத்திற்காக இரகசியமாய் உழைத்துவந்த சங்கம் 'ஐரிஷ் குடியரசுச் சகோதரத்துவ சங்கம்'. அது 1865-இல் ஸ்தாபிக்கப்பட்டது. பிற்காலத்தில் அச்சங்கம் ஒன்று இருப்பதாகவே பொதுஜனங்களுக்குத் தெரியாது. ஆனால், பாஷையையும் உடல் வலிமையையும் வளர்க்கவேண்டும் என்ற இயக்கங்கள் தோன்றிய பொழுது அச்சங்கமும் ஊக்கமாய் வேலை செய்ய முற்பட்டது. ஆர்தர் கிரிபித்