பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3


ஈஸ்ட்டர் கலகம்

மைக்கேல் காலின்ஸுக்கு வயது இருபத்தாறு ஆயிற்று. போரை எதிர்நோக்கி அவனுடைய தோள்களும் உள்ளமும் அடித்துக்கொண்டிருந்தன. தொண்டர்கள் காலங் கருதிக் காத்திருந்தனர். லண்டனில் காலின்ஸுடன் கூடிவாழ்ந்த நண்பர்கள் பலரும் அவனைப்போலவே தாய்நாடு திரும்பிவந்தனர். லண்டன், லிவர்பூல், மாஞ்செஸ்டர், கிளாஸ்கோ முதலான நகரங்களிலிருந்து பலர் அயர்லாந்துக்கு வந்து, டப்ளின் நகருக்கு அருகேயுள்ள கிம்மேஜ் என்னுமிடத்தில் குடியேறினர். பட்டாளத்தார் போல அவர்கள் பாதுகாப்புக்குத் தலைவர்களை நியமித்துக்கொண்டிருந்தனர். பகைவவர்கள் அங்கு புகுந்தால், எதிர்த்துப் போராடவேண்டும் என்று தளவாடங்கள் சேர்த்துவைத்துக் கொண்டிருந்தனர். ஆங்கில நாட்டில் கட்டாயமாய்ப் படையில் சேர்த்து விடுவார்களே என்று அவர்கள் அஞ்சி வரவில்லை. ஆனால், தங்கள் நாட்டின் பிறப்புரிமையைப் பறித்தவர்களும், பல ஐரிஷ் தேசபக்தர்களை வதைத்தவர்களுமான அந்நியர்க்காகப் போராடவோ, போரில் மடியவோ, அவர்கள் விரும்பவில்லை. அவ்வாறு செய்தல் தேசத்துரோகம் என்பது அவர்கள் கருத்து.

காலின்ஸ் வெளிப்படையாகத் தான் வேலைபார்த்து வருவதாகக் காட்டிக்கொள்வதற்கு, 'கிரெய்க்-கார்ட்னர்'