பக்கம்:மொழியின் வழியே.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 109

உரை நடைக் காலத்தில் சொல்லை விடக் கருத்துக்குத் தான் அதிக மதிப்பு. பொருளுணர்ச்சிக்கு மதிப்பே ஒழிய, பொருளுணர்த்தும் கருவிகளான சொற்களுக்கு மதிப்பில்லை.

காந்தியடிகளைப்போல், புத்தரைப் போல், வாழ்க்கையில் எளிமை கண்டவர்களை உலகம் போற்றவில்லையா? மொழியை எளிமையாகவும், தூய்மையாகவும், தெளிவாகவும், பயன்படுத்துகிறவர்களையும் போற்றத்தான் வேண்டும். அறிவின் நோக்கில் பார்த்தால் வாழ்க்கையில் ஆடம்பரம் ஒரு பிழை. அதுபோல் மொழியில் ஆடம்பரமும் ஓர் ஆணவம். எளிமையில் ஒரு தூய்மை உண்டு. அந்தத் தூய்மை போற்று வதற்கு உரியது. மேற்கொள்வதற்குமுரியது. தப்புத் தப்பாக யாப்பும் கோப்புமின்றி ஆயிரம் கவிதைகள் எழுத முயல்வதைக் காட்டிலும் எளிமையும், தூய்மையும், தனித் தன்மையும் இலங்க நான்கு வாக்கியங்கள் நன்றாகவும், அழகாகவும், எழுதி விடுவது எவ்வளவோ சிறந்தது. பிழை யில்லாமல் தெளிவாக எழுதுவதே ஓர் அறம். -

அந்த அறத்தை எத்தனை பேர் செய்கிறார்கள், என்பதைக் கேட்டுக் கொண்டிருப்பதைவிட எத்தனை பேர் செய்ய வில்லை; என்று கேட்பதுதான் இன்றைய நிலைக்குப் பொருந்தும் கேள்வி. பல பேர்கள் சேர்ந்து ஒரு பிழையைச் செய்துவிட்டு அதையே மரபாக்கிவிடும் சுயநலத்தை இன்று எங்கும் காண்கிறோம். புலமை என்கிற செருக்குப் புலமையை உண்மையாகவே பெற்றிருப்பவர்களுக்குச் சொந்தம் என்ற நிலைமாறி ஆள் பலமும், கட்சி பலமும் உள்ளவர்கள்கூட அந்தச் செருக்கைக் கொண்டாடலாம் என்னும் துணிவு இப்போது வந்திருக்கிறது. கருத்தைச் சொல்வதற்கு எளிமையும், தூய்மையும், அவசியம். சொற்றொடர் நிலையாகிய உரை நடையின் உயிர்நிலை தெளிவு. அதை மறந்துவிடலாகாது. தெளிவை முக்கியமாகக் கொண்டு பின் தூய்மையையும், மரபையும், சரிபார்த்துக் கவனித்துக்கொள்ள வேண்டும்.