பக்கம்:மொழியின் வழியே.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி }} ]

'என்னுடைய சிற்றப்பாவிற்கு மருமகனுக்கு மூத்த பிள்ளைக்கு இளைய மனைவி' - என்கிற வாக்கியத்தில் மூன்று 'கு' உருபுகள் நின்று பொருளையும் கெடுத்து வாக்கிய அழகையும் கெடுக்கின்றன. இதே வாக்கியத்தை என்னுடைய சிற்றப்பாவிற்கு மருமகனின் மூத்த பிள்ளைக்கு இளைய மனைவி' - என்றால் முன்னைவிடத் தெளிவு அதிகம். 'என் சிற்றப்பாவின் மருமகனுக்கு மூத்த பிள்ளையுடைய இளைய மனைவி' - என்றால் இன்னும் தெளிவு.

தெளிவுக்குச் சுருக்கம் அவசியம். சுருக்கத்தில் அழகு அதிகம். தெளிவும், சுருக்கமும், இருந்தால் முறையும் இருக்கும்.

'பொங்கிப் பாய்ந்து நுரைத்துப் பல்காலும் கரை நோக்கி உந்தப் பெற்று மீளும் அலைகள் பலவாக எழா நிற்க, அப்போழ்தத்துப் படுஞாயிற்றின் செவ்வொளி நீர்ப்பரப்பில் மின்ன; எங்கும் இன்பத்துட் குளித்து மூழ்கும் சூழலில் புட்குலம் கூடடையக், கன்று கறவைகள் வீடடைய, மாலை முடிந்து இருள் போர்த்தது' என்று நீட்டி எழுதிய தொடரைச் சிறிது சிறிதாய்ச் சுருக்கி, 'அலைகள் பொங்கிப் பாய்ந்து நுரைத்தன. பல்காலும் கரைநோக்கி உந்தப்பெற்று மீண்டன. அப்போது மறையும் கதிரவனின் செவ்வொளி நீர்ப்பரப்பில் மின்னியது. எங்கும் இன்பத்துட் குளித்து மூழ்குவது போன்ற சூழல். புட்குலம் கூடடைகின்றன. கன்று கறவைகள் வீடடைகின்றன. மாலை முடிந்து இருள் போர்த்தது - என்று ஏழு சிறு வாக்கியங்களில் பிரித்து எழுதினால் தெளிவும், பொருளுணர்ச்சியும் அதிகம். பொருட்சுமை அதிகமாகி வாக்கியத்தை வளைத்து அழுத்தி இறுக்காமல் தடுப்பதற்குச் சுருக்கம்தான் சரியான வழி.

வினையெச்சங்களைப் பலவாக அடுக்கி எண்ணி நீட்டி முடிப்பதும் ஒருவகை கெட்டவாக்கியப் பழக்கம்.