பக்கம்:மொழியின் வழியே.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 115

பேராசிரியரே இச்சூத்திரவுரையில், நடுவுநிலை என்பது ஒன்பது சுவையில் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப் படுஞ் சமனிலை. அஃதாவது, செஞ்சாந்து எறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந்து ஓடா நிலைமை. அது காமம் வெகுளி மயக்கம் நீங்கினார் கண்ணே நிகழ்வது. சிறுவரவிற்றாகலான் அவற்றொடு கூறினான்’ எனக் கூறி அமைக்கின்றார். உலகியல் நீங்கினார் இயல்பு என்று கூறிய பேராசிரியரே இங்கே 'ஒன்பது சுவையுள் ஒன்றென நாடக நிலையுள் வேண்டப்படுவது' என்றும் கூறியிருக்கின்றார். இஃது இவ்வாறு இருக்க, . .

“நகையே அழுகை இளிவரல் மருட்கை

அச்சம் பெருமிதம் வெகுளிஉவகை என்று

அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப"

  • - (தொல். மெய் 3)

என்று ஆசிரியர் தொல்காப்பியர் கூறும் எட்டுச்சுவையும், பதினாறும் முப்பத்திரண்டும் ஆவது எவ்வாறு என்று காண்போம். நகை எழுவாயாக உவகைகாறும் உள்ள எட்டுச் சுவையும் சுவைக்கப்படுபொருள், சுவைக்கின்ற பொறியுணர்வு, சுவைக்கும் மனோபாவம், சுவைப்பான் புறத்தே தோன்றும் சத்துவங்கள் என்னும் நான்கினோடும் உறழ முப்பத்திரண் டாகும். சுவைக்கப்படும் பொருளும் சுவையுணர்வும் என்னும் இரண்டனுள் ஏனையவற்றையும் அடக்கி எண்சுவைகளையும் உறழ்தரச் சுவை பதினாறு ஆகும். இறுதியாக ஆராய்ந்து முடித்தால் அவை எட்டும் எட்டுச் சுவைகளென்ற எல்லைக் குள்ளேயே அடங்கிவிடுகின்றன.

'நாலிரண்டாகும் பாலுமா ருண்டே'

. (தொல். மெய் 2)