பக்கம்:மொழியின் வழியே.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 121

விகாரமின்மையும் அவையிற்றை நோக்க விகாரமே யாதலினென்க. 'அதற்கு விகாரமுண்டு எனின் முன்னை எட்டனுள்ளுஞ் சார்த்திக் கொள்ளப்படும்' என்று இலேசான் உடம்பட்டார் பேராசிரியரும். அமைதிச்சுவைக்கு அமைதியே விகாரசத்துவமாதலின் அவையிற்றோடு சார்த்திக்கோடல் அத்துணைச் சிறப்பின்றாதலின் தனித்து நின்றியலும் ஆற்றலது எனலே சாலப் பொருந்தும். நாடக நிலையுள் இவ்வமைதிச் சுவை வேண்டப்படுவதும் அமைதியாகிய மெய்ப்பாடு குறித் தேயாம். மெய்ப்பாடின்று எனின் நாடக நிலையுள் வேண்டப்படுமெனல் பொருந்தாது ஆகலின் அமைதிச் சுவைக்கு விகாரமின்மையாகிய அதுவே சத்துவ விகாரமாய் மெய்ப்பாடு புலப்படுத்தும் என்பதாம். சமனிலையும் உலகியலோடு தொடர்புடைய ஒன்றாகலானும், உலகியலுள் நாடகநிலைக்கு வேண்டப்படுதலானும், பொருளதிகாரத்து அகத்திணையியல், புறத்திணையியல்களுள் உலகியல் நீங்கினார் பெற்றி ஆசிரியராற் கூறப்படுதலானும் அதனால் ஆசிரியர் கூறாராயினார் என்பது பொருந்துதலின்று. பெரு மிதத்துட் சிலவும் உலகியல் நீங்கினார் பெற்றியாகலிற் கூறாமை வேண்டும். இச்சொல்லிய காரணங்களான், பெருமிதத்துள் அடங்கும் என்னுங் கருத்தினாலாதல், 'உடைமை இன்புறல் நடுவுநிலை” எனப் பிற்கூறி அமைக்கும் கருத்தினாலாதல் சமனிலைச் சுவை கூறாராயினர் என்பதே பொருத்தமாக அமைவதாம். 口