பக்கம்:மொழியின் வழியே.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 மொழியின் வழியே

இனி, மொழி முன்னேற்றத்தையே நோக்கமாகக் கொண்ட கழகங்கள், மன்றங்கள், சங்கங்கள் தோன்றவேண்டும். ஊர் தோறும் மொழி வளர்ச்சி மன்றங்கள் ஓங்கி வளரவேண்டும். அரசியல் துறையோடு ஒன்றுபட்ட முறையில் முன்னேறும் போதுதான் மொழி தனக்கென ஓர் அழியாத இடத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். எந்த ஒரு மொழியும் அரசியலோடு இசையாத வரை தனித்து முன்னேற முடியாது. மொழியின் மதிப்பும் தரமும் பெருகுவது அரசியலில் இடம் பெறுகின்ற போதுதான். ஆங்கிலம் இன்று உலகப் பெருமொழியாக அமைந்துள்ளதென்றால் அதற்கு முதன்மையான காரணம் முதலில் அது அரசியல் மொழியாக அமைந்ததுதான் ஆகும். எனவே, இதுகாறுங் கூறிய கருத்துக்களால், மொழியின் முன்னேற்றம் பிழையற எழுதுவதனாலும், பிழையறப் பேசுவதனாலும் மொழி முன்னேற்றக் கழகங்கள், நிலையங்கள் முதலியவற்றாலும், அரசியலோடு இயைபு பெறுவதனாலும், மக்கள் கடமையையுணர்ந்து மொழியைப் பேணுவதனாலும் ஏற்பட முடியும் என்று அறிகிறோம். ஆகவே, மொழி முன்னேற்றம் நாகரிக மக்கள் வாழும் தமிழ்நாடு போன்ற நாடுகளுக்கு உடனடியாக வேண்டப்படுவதொன்று. தமிழ் மக்கள் நல்லதொரு புத்துணர்ச்சி பெற வேண்டுமாயின் இம்முன்னேற்றத்திற்குப் பாடுபட வேண்டும். 亡于

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/20&oldid=621365" இலிருந்து மீள்விக்கப்பட்டது