பக்கம்:மொழியின் வழியே.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மொழியின் வழியே!

தொட்டியில் குப்பை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கொட்டலாம். தங்கப் பேழையில் அப்படிச் செய்யலாமா? தங்கத்தால் பேழை (பெட்டி) செய்தால் அதற்குள் பொதிந்து வைக்கும் பொருள் அந்தப் பேழையின் மதிப்பைக் காட்டிலும் உயர்ந்ததாக இருக்கவேண்டுமல்லவா? பாட்டில் பொதிந்து வைக்கின்ற பொருளும் அப்படித்தான் இருக்கவேண்டும். பேச்சைக் காட்டிலும் உயரியது, எழுத்து. எழுத்தைக் காட்டிலும் உயர்ந்தது பாட்டு. பாட்டினும் உயர்ந்தது அதன் பொருள். பொருளினும் உயர்ந்து விளங்குவது அதன் குறிக்கோள். பாட்டு மனித வாழ்க்கையைத் துலக்கி ஒளியும் உயர்வும் தரவேண்டும், வீட்டுக்கு ஒளி கொடுக்கும் மனைவிளக்கைப்போல. பாட்டு மனித வாழ்க்கையின் கீழ்த்தர உணர்வுகளைக் கொட்டி வைக்கும் இருட்டறையாக இருக்கக் கூடாது, அசந்தர்ப்பத்தால் வீட்டை ஒளி செய்த விளக்கே வீட்டுக் கூரையை எரித்து விடுவது போல. எனவே குறிக்கோளில்லாத பாட்டு ஒரு பிணமாம்.

பாட்டின் நெறி முறை

நடப்பதற்குப் புலம் நெறி; நடப்பதற்குக் கருவி கால்கள். வழியும் வேண்டும், கால்களும் வேண்டும். இரண்டும் சேர்ந்தால்தான் அதற்கு வழிநடை என்று பெயர். பாட்டுக்குப் புலம் அது செல்லும் நெறி. பாட்டுக்குக் கருவி அதன் முறையான கருத்து. பூவைத் தாங்குவதற்குக் காம்பு வேண்டும். காம்பை அழகான இதழ்க் கோவையால் மூடிக் காட்டி அழகு செய்யப் பூ வேண்டும். பூவும் காம்பும், தனித்தனியே பிரிந்தால் அழிவுதானே? பாட்டின் நெறியும் கருத்தும் நேர் எதிர்த் திசைகளில் முரணான பாதையில் செல்லக்கூடாது. "எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்று ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? பாட்டின் நெறியும் அது கற்பவனுக்குக் கூறுகின்ற கருத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/36&oldid=621381" இலிருந்து மீள்விக்கப்பட்டது