பக்கம்:மொழியின் வழியே.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மொழியும் செவிப்பயனும்

தம்மை உடையார்க்கு மறுக்காமல் அவர் விரும்பும் பயன்களை யெல்லாம் நல்கி அமைவன யாவையும் செல்வம். இளமையும் அழகும் ஒருங்கு அமைந்தவர் இளமைச் செல்வர். பொருளும் பெருவாழ்வும் பெற்றவர் பொருட்செல்வர். அருளும் அன்பும் பண்பும் பெற்ற தூய மனத்தினர் அருட் செல்வர். கலைகளையுடையவர் கலைச்செல்வர். கவிதை செய்பவர் அல்லது கவிதையில் நயங்காண்பவர் இருவரும் கவிதைச் செல்வர். இவ்வாறு பலரைக் கூறலாமெனினும் செல்வர் யார்? என்பதற்கு விடை இவ்வளவிற் சாலும். ஒரு குறிப்பிட்ட துறையில் தமக்கு இணையின்றாக ஓங்கிய ஆற்றலுடையவர் யாவராயினும் அக்குறிப்பிட்ட துறையில் அவரே செல்வர். செல்வம் என்பது உடைமை. அது பொருளாகத் தான் இருக்க வேண்டுமென்னும் வரையறை யில்லை. தம்மை உடையாரைச் செம்மை நெறிச் செலுத்தி இம்மை மறுமைக்குத் தீமையில்லா நலம்பயக்கும் உடைமைகளெல்லாம் பண்ணப் பணைத்த பெருஞ் செல்வங்கள்.

"நுண்ணுணர்வு இன்மை வறுமை அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம்’ என்று நாலடியார் நுண்ணுணர்வுடையாரைச் செல்வராகவும் அஃதிலாரை ஏழையராகவும் அமைத்துக் காட்டுகிறது. இக்கருத்துப் பற்றியே அறநூலுடைய பெருநாவலராகிய தெள்ளு தமிழ் மறை வள்ளுவரும்,

'அறிவுடையா ரெல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனு மிலர்'

என்று உடைமை அறிவு பற்றி முடிவு செய்வதோர் செல்வ மாகவும் ஆவதைத் தாமெடுத்துக் கூறி விளக்குவாராயினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/40&oldid=621385" இலிருந்து மீள்விக்கப்பட்டது