பக்கம்:மொழியின் வழியே.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - 43

அல்லது உணவையோ ஒருவர் பிறவற்றில் ஈடுபாடின்றி மன இயைடோடு எந்த முறையிற் சுவைக்கின்றாரோ அதே முறையிற்றான் செவிச் செல்வத்தை விரும்புவாரும் கேட்டுக் கேட்டுச் சுவைக்கின்றனர். மிளகுச் சாற்றில் பெரு விருப்புடையா ரொருவருக்கு அவர் விரும்பும்போது அது கிடைக்கவில்லையெனின் எத்தகைய துன்பமுறுவாரோ அதேதுன்பத்தைத்தான் கேட்டுக் கேட்டுப் பழகியவரும் கேட்க முடியாதபோது உறுகின்றார். கேள்வியாகிய செவிச் செல்வம் உடையவர்களுக்கும் பசி வருகின்ற நேரம் உண்டு என்றால் அது அவர்களுக்குச் செல்வமாகிய கேள்வி இல்லாத நேரமே யாகும். கேள்வியுணர்வில் அவர்கள் இன்பங்காணத் தொடங்கி விடுவார்களாயின் பின் சுவையுணவை மறந்தே விடுகின்றனர். செவிக்கு உணவு கிடைக்க முடியாத நிலையில்தான் அவர்கள் வயிற்றுக்கும் சிறிதளவு உணவு ஈய வேண்டியிருக்கிறது. வயிற்றிற்குள் இடும் உணவு அன்றன்றே அழியக்கூடியது. செவிக்குள் இடும் உணவு என்றென்றும் அழியாதது. இந்தப் பெரிய கருத்தமைதியை ஆசிரியர் பெருந்தகையார் திருவள்ளுவர் மிக நயம்பட,

'செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்' -

என்று கூறியுள்ளார். இந்தக் குறுவெண் பாட்டில்தான் எத்துணைப் பெரிய நயங்கள் அமைந்துள்ளன. செவிக்கு உணவு என்றே செவிச் செல்வமாகிய கேள்வியைக் கூறுகிறார். வயிற்றுக்கு உணவாகிய சோறுங்கறியும் பலவேளை யுண்டும், மீண்டும் மீண்டும் வேண்டப்படுகின்றன. ஆனால் செவிக்குணவாகிய கேள்வி பலமுறை வேண்டப்பட்டாலும் முன்னுண்டது அழிந்து போவதில்லை. நாளுக்கு நாள் பல்கி வளர்கின்றது. இல்லாத போழ்து என்பதனால் கேள்வியுணவு இருக்கும் போது வயிற்றுக்குணவு வேண்டும் என்ற நினைவே எழுவதில்லை என்பதை நயம்படத் தெரிவிக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/45&oldid=621390" இலிருந்து மீள்விக்கப்பட்டது