பக்கம்:மொழியின் வழியே.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. மொழியும் மரபும்

கற்பனை, பேச்சு, எழுத்து, காவியம் ஆகிய எவற்றிலும் காலச் சூழ்நிலைக்கு ஏற்ற புதுமைகள் இடம் பெற்றிருப்பது போல் யாவற்றையும் ஊடுருவி நின்று தாங்கும் பழைய அடிப்படை ஒன்றும் அவசியம் அமைந்திருக்க வேண்டும். மொழியின் தூய்மைக்கும், மொழியை மூலமாகக்கொண்டு நிகழும் கலை, காவியம் ஆகியவற்றுக்கும் நிரந்தரமான இயற்கைப் பாதுகாப்பை உண்டாக்கிக் கொடுக்கும் வன்மை அந்த பழைய அடிப்படையின் பொறுப்பிலே நிகழ வேண்டும். காலம், வாழ்க்கை, காவியம், உலகம் ஆகிய எல்லாப் பொருள்களையும் மொழிக்குரிய சம்பந்தத்தைக் குறிக்கொள்ளும் மூலமாகவாவது அது காப்பாற்றுவதற்கு உரியது. அந்த 'அது' என்பதுதான் எது? பழைய அடிப்படையா? அப்படி என்றால் என்ன? அதுதான் மரபு. மரபைக் கடைப்பிடிப்பதில் அறிவும் விழிப்பும் வேண்டியதில்லை என்றாலும், அறிவும் விழிப்பு:மே துணையாக மரபைச் சீர்திருத்தி மாற்றிக் கொள்ளலாம் என்றாலும் இரண்டுமே வேண்டாத துணிவுகள். மரபின் பொறுப்பை உணர்ந்தவர்கள் இந்த இரண்டு துணிவும் தவறு பட்டவை என்பதை அறிவார்கள். உணர்ச்சிகளை வெளியிடுவதற்காகக் காவியத்தைப் படைக்கும் தேவை பெருகிய காலம் இது. மரபு குறுக்கிடும் நிலை ஏற்பட்டால், புதுமை, புரட்சி என்று அழகிய சொற்களைக் காட்டி மரபை ஒதுக்கி விலக்கத் துணிந்தவர்கள் வாழும் காலமும் கூட. அறிபுலனுக்கும் நுகர்புலனுக்கும் அவை பிறக்கும் மனத்திற்கும் ஆகிய இம்மூன்றோடும் தொடர்புபடும் இலக்கியம் மரபை விலக்கிய முறையிலே தோற்றுவிக்கப் படுமானால் சமுதாயத்தோடு இயைபு இழப்பது உறுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/47&oldid=621392" இலிருந்து மீள்விக்கப்பட்டது