பக்கம்:மொழியின் வழியே.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்து வந்த பின்பு இன்னும் முடிவற்றுத் தெரிகின்ற என்னுடைய நீண்ட இலக்கிய யாத்திரையில் தமிழ் மொழியின் வழியே நான் சிந்தனை செய்த இருபத்தொரு கட்டுரைகளைத் தொகுத்து இந்நூலில் அளிக்கிறேன். கால்கள் நடக்கின்ற வழியில்தான் மனமும் நடக்க வேண்டும் என்று நினைப்பதைவிட மனம் நடக்கிற வழியில் கால்கள் நடக்க வேண்டும் என்று நினைப்பது சிறந்தது. என்னுடைய மனம் நடக்கின்ற வழி எப்போதுமே தமிழ்வழி. உலகத்துச் சிந்தனைகளை எல்லாம் சிந்தித்தாலும் அவற்றைத் தமிழ்நாட்டு மனத்தோடு தமிழனாக இருந்து தமிழின் வழியே சிந்திக்க வேண்டும் என்பது என் குறிக்கோள். தமிழ் வழியில் நடக்காதவர்களுக்கு அருகே என்னுடைய கால்கள் நடக்க நேரும்போதும்கூட மனம் தமிழ் வழியிலேயே நடந்து கொண்டிருக்கும். கால்கள் எந்தெந்த வழிகளில் நடக்க நேர்ந்தாலும் மனம் ஒரே வழியில் நடக்கும்படி பழக்கிக் கொள்வதைத்தான் தவம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். அந்தத் தவத்தைத் தமிழ்த்தவமாகச் செய்துகொண்டு வருகிறேன் நான். தொல்காப்பியர் முதல் சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன் வரை நீண்டு கிடக்கும் தமிழ்த் தலைமுறைகளின் பெரிய வழிகளைக் கடந்து வந்து, நிகழுகின்ற காலமும், வரவிருக்கும் காலமும் தமிழுக்குத் தருகின்ற தரவிருக்கும் புதுமைகளை எதிர்நோக்கி இன்னும் நடந்துகொண்டேயிருக்கிறேன்.

இந்தத் தமிழ்வழி நடையில் வாசகர்களை எல்லாம் என்னோடு அழைத்துச் செல்ல ஆசைப்படுகிறேன். அந்த ஆசை காரணமாகத்தான் இந்த நூலுக்கு மொழியின் வழியே - என்ற பெயரையும் சூட்டினேன். இதிலுள்ள கட்டுரைகளில் நடை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/6&oldid=621351" இலிருந்து மீள்விக்கப்பட்டது