பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

97


குடங்கள், சிறிது குடைவான பாத்திரங்கள், மேசைமீது மலர் வைக்கப் பயன்படும் நீண்ட பாத்திரம் போன்றவை, பம்பர உருவில் அமைந்த சீசாக்கள், இக்காலச் சீசாக்களைப் போன்றவை, பானைகள், சட்டிகள், பெருந் தாழிகள், நீர்த் தொட்டிகள், பலவகை முடிகள், புரிமனைகள் எனப் பலவகை ஆகும்.

பூசைக்குரிய மட்பாண்டம்

இதன் உயரம் 5 செ. மீ. இஃது அடிப்புறத்தில் தண்டு போன்ற வடிவம் உடையது. இதன் மேற்புறம் வட்டில் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்புடன் இருக்கும் இப்பாண்டம் பூசைக்கென்றே பயன்பட்டதாதல் வேண்டும் என்று அறிஞர் கருதுகின்றனர். இத்தகைய கலன்கள் பாபிலோனிய நகரங்களான, ‘கிஷ், உர், பாரா’ என்னும் இடங்களில் கிடைத்திருத்தல் கவனித்தற்குரியது.

கனல் சட்டி

இதுவும் மண்ணால் இயன்றதேயாம். இஃது, இக்காலத்து மரக்கால் போன்று காணப்படுகின்றது. இது நிறையத் துளைகள் இடப்பட்டு மேல் மூடியுடன் இருக்கின்றது. இதற்குள் நெருப்பிட்டு அறைக்குள் கட்டில்களுக்கு அடியில் வைப்பின், துளைகள் வழியே அனல் வெளிப்பட்டு அறைக்குள் உள்ள குளிரை அப்புறப்படுத்தும் அறை சூடாக இருக்கும். இக்கனல் சட்டிகள் பல கிடைத்துள்ளன. இக்கனல் சட்டிகளைப் பயன்படுத்திச் சுகவாழ்வு வாழக் கற்றிருந்த அப்பண்டைப் பெருமக்கள் பெருமையை என்னென்பது!

குமிழ்கள் கொண்ட தாழி

இது மிக்க வியப்பூட்டும் பாத்திரமாகும். இதனைச் சிறப்புடைப் புதை பொருள் என்று ஆராய்ச்சியாளர் எண்ணுகின்றனர். இதன் உடம்பில் முள், போன்ற அமைப்புகள்