பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டுப் பொருள்களும் விளையாட்டுக் கருவிகளும்

101


அக்கலவையைப் பயன்படுத்தினர் என்பது வெளியாகிறது.ஆயின், இப்பிங்கான் போன்ற பொருள்கள் ஏலம், சுமேர் என்னும் நாடுகளில் இருந்த சவக் குழிகளில் கண்டெடுக்கப்பட்டன. அதனால், இப்பொருள்கள் அங்கிருந்து கொண்டுவரப்பட் டிருத்தலும் கூடும் என்று அறிஞர் நினைக்கின்றனர்.

அம்மி, ஏந்திரம், உரல்

சிந்துப் பிரதேச மக்கள் அம்மி, குழவி, உரல் இவற்றைப் பயன்படுத்தினர். மாவரைக்கும் கல் ஏந்திரங்கள் நிரம்பக் கிடைத்துள்ளன.இவை பெரிய கல்தட்டுகள் மீது வைக்கப்பட்டே மாவரைக்கப் பயன்பட்டன. அரைக்கும்பொழுது மா சிதறிக் கீழே விழாமல் இருப்பதற்காகவே கல் தட்டு ஏந்திரத்தின் அடியில் வைக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஹரப்பாவிலும் இத்தகைய ஏந்திரங்கள் கிடைத்துள்ளன. கல்லுரல்களும் ஹரப்பாவில் கிடைத்துள்ளன.

பலவகை விளக்குகள்

ஹரப்பாவில் முட்டை வடிவத்தில் விளக்கொன்று கிடைத்தது. இதன் வாய்ப்புறம் குவிந்து, திரி இடுவதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இவ்விளக்கிற்குள் ஒருவகை எண்ணெய் இட்டுத் திரியிட்டுக் கொளுத்தும் வழக்கம் இருந்திருத்தல் வேண்டும். வேறு பலவகை விளக்குகளும் கிடைத்துள. மொஹெஞ்சொ-தரோவில் ஒரு வகை மெழுகுவர்த்தி வைக்கும் தட்டுகள் களிமண்ணாற் செய்யப்பட்டுள்ளன. ‘அப்பழங்காலத்தில் மெழுகு வத்திகள் உபயோகத்தில் இருந்தன என்பது சுவை பயக்கும் செய்தியே ஆகும்’, என்று டாக்டர் மக்கே கூறி வியக்கின்றார்.[1]


  1. In any case, it is extremely interesting to discover that candles were also in use at such an early date’. Dr.Macky’ The Indus Civilization’, p. 137