பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணிப் பொருள்கள்

109


அறிந்திருந்தனர் என்பது வெளியாம். அம்மக்கட்குச் சங்கும் முத்தும் தமிழகத்திலிருந்து போயிருத்தல் வேண்டும் என்பது அறிஞர் கருத்து. அஃதாயின், அவர்கள் தமிழ் நாட்டுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர் எனல் பொருந்தும். இங்ஙனம் அம்மக்கள் அப்பழங்காலத்தில் சரித்திர காலத்திற்கும் பல ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்தியா முழுவதிலும் வாணிபப் பழக்கம் கொண்டிருந்தனர் - ஆங்காங்குக் கிடைத்த பொருள்களை வாங்கிப் பயன்படுத்திச் சுகவாழ்க்கை வாழ்ந்தனர் என்னும் அரிய செய்திகளை அறிய எவர்தாம் வியப்புறார்!

வேலை முறை

அவ்வறிஞர்கள் செம்மையும் வெண்கலத்தையும் உருக்கி வார்ப்படமாக்கினர்; தகடுகளாகத் தட்டி ஆணி கொண்டு பொருத்தினர்; இவ்விரண்டு முறைகளாற்றான் எல்லாப் பொருள்களையும் செய்துகொண்டனர். ஆனால், அவர்கள் பொன், வெள்ளி இவற்றாற் செய்த பொருள்களுக்கே பொடி வைத்துப் பற்றவைக்கும் முறையைக் கையாண்டனர்.

செம்பு-வெண்கலப் பொருள்கள்

மொஹெஞ்சொ-தரோவில் வாழ்ந்த செம்பு வெண்கலக் கன்னார்கள் கத்தி, வாள், ஈட்டி, அம்பு முதலிய கருவிக்ளையும், பல்வேறு அளவுகளையுடைய கோப்பைகள் நீர்ச்சாடிகள், தட்டுகள், தாழிகள்.இவற்றின் மூடிகள் முதலிய வீட்டுப் பொருள்களையும் செய்யக் கற்றிருந்தனர்; சிறிய பொருள்களை உருக்கி வார்ப்படமாக வார்த்துச் செய்துள்ளனர்; பெரிய பொருள்களைத் தகடுகளாக அடித்துப் பொருத்திச் செய்துள்ளனர். இவற்றுள் பெரும்பாலான பொருள்களுக்குக் கைப்பிடியே இல்லை. இங்ஙனமே அம்ரீ, சான்ஹாதரோ இவ் விடங்களில் கிடைத்த செம்பு - வெண்கலப் பொருள்களுக்கும் கைப்பிடி இல்லாதது குறிப்பிடத்தக்கது.