பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மொஹெஞ்சொ - தரோ


சிந்துப் பிரதேச விலங்குகள்

ஆராய்ச்சியிற் கிடைத்த சில விலங்குகளின் எலும்புக் கூடுகளை அறிஞர் ஆராய்ந்துள்ளனர்; விளையாட்டுக் கருவிகளுள், பல விலங்குப்பதுமைகள் காணப்படுகின்றன. விலங்குகள் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகள் சில கிடைத்துள்ளன. இம் மூன்றைக்கொண்டும் சிந்துப் பிரதேசவிலங்குகள் இன்னவைதாம் என்பதை ஆராய்ச்சியாளர் முடிவு செய்துள்ளனர். அவற்றை ஒன்றன்பின் ஒன்றாக இங்குக் காண்போம்:

யானை

சிந்துப் பிரதேசத்தின் மேற்கெல்லை கீர்தர், இந்துகுஷ், சுலைமான் முதலிய மலைத் தொடர்களும் அவற்றைச் சேர்ந்த காடுகளுமே ஆதலின், காட்டு விலங்குகளாகிய யானை, புலி, கரடி, காண்டாமிருகம், காட்டு எருமை முதலியவற்றைச் சிந்துப் பிரதேச மக்கள் அறிந்திருந்தனராதல் வேண்டும். இவற்றுள் யானை முதன்மை பெற்றதாகும். விலங்கினத்தில் இணையற்ற பருவுடல் பெற்றுள்ள இவ்விலங்கு, அதன் தந்தம் பற்றிப் பெரு மதிப்புப் பெற்றிருந்தது. தந்தத்தால் இயன்ற சில பொருள்கள் மொஹெஞ்சொ-தரோவில் கிடைத்துள்ளமையால், சிந்துப் பிரதேச மக்கள் யானைகளை வளர்க்கவும் வேட்டையாடவும் அறிந்திருந்தனர் என்னல் தவறாகாது.

எருதுகள்

எருது மிகப் பழைய காலம் முதலே பயிர்த் தொழிற்குப் பயன்பட்ட விலங்காகும். ஏலம், சுமேர் முதலிய இடங்களிலும் இவ்விலங்கு உழுதொழிற்குப் பயன்பட்டது என்பதை அவ்வந் நாட்டு முத்திரைகள் வாயிலாக உணரலாம். இது வண்டியிழுக்கவும் பயன்பட்டது. இதன் பேருதவி கண்டே சிந்துப் பிரதேச மக்கள் இதனைத் தெய்வத்தன்மை வாய்ந்ததாக நினைத்தனர். சிவபிரான் யோகத்தில் இருப்பதுபோலவும், அவரைச் சுற்றிலும் சில விலங்குகள் நிற்றல் போலவும் பொறிக்கப்பட்டுள்ள முத்திரையில்