பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

மொஹெஞ்சொ - தரோ


மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்த இம்மணிகள் போன்றனவும், 8 போன்ற அமைப்புடைய சிவப்பு மணிகள் சிலவும் சான்ஹு-தரோவில் கிடைத்தன. பின்னர்க் கூறப்பட்ட மணிகள் வெண்ணிற ஒவியங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு மணியும் 2 செ. மீ. உயரம் இருக்கின்றது. அங்கு, வெண் மணிகள் மீது செந்நிறம் தீட்டி, வெண்ணிற ஒவியங்கள் தீட்டப்பட்டுள்ள மணிகளும் சில கிடைத்துள்ளன.

பட்டை வெட்டப்பட்ட மணிகள்

மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் பட்டை வெட்டப்பட்ட மணிகள் கிடைத்துள்ளன. இத்தகைய மணிகள் எகிப்தைத் தவிர வேறு எந்நாட்டிலும் கிடைத்தில; எகிப்திலும் பிற்கால உரோமர் தம் கல்லறைகளிலேயே கிடைத்தன. இவை ஒவிய மணிகள் அல்ல; அறுகோணம், எண்கோணம் என்னும் முறையில் பட்டைகளாக அமைந்தவை.

கற்களிற் புலமை

சிந்து வெளியினர், இங்ஙனம் பல திறப்பட்ட கற்களைச் சோதித்து, அவற்றின் எழில் குன்றாமல் இருக்கும்படி அரிய வேலைப்பாடுகள் செய்து, பலவகை மணிகளாக்கி மாலைகளாகச் செய்தும், வேறு பல உலோகங்களாலான மணிகளுடன் சேர்த்தும், பொன் வெள்ளி முதலியவற்றால் ஆன பலவகை அணிகளிற் பொருத்தமுறப் பதித்தும் அணிந்து வந்தனர். வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட அப்பழங்காலத்தில் - இன்றைக்கு 5000 ஆண்டுகட்கு முன்னர் - அப்பெரு மக்கள் கற்களிலும் புலமை சான்றவராக இருந்தனர் எனின், அம்மம்ம! அவர்தம் உயரிய நாகரிகத்தை என்னெனப் புகழ வல்லேம்![1]


  1. ஒன்பது வகை மணிகளைச் சோதிப்பதில் பண்டைத் தமிழர் புலமை சான்றவர் என்பதை ‘மதுரைக் காஞ்சி’ முதலிய தொன்னூல்களால் அறிக.