பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

147


'தங்கக் கவசம் கொண்ட மணிகள்'

இம்மணிகளுட் சில மாலையாகக் கோக்கப்பட்ட போது, மணிகளின் இருபுறத்தும் தங்க வில்லைகள் கவசம் போல ஒட்டவைக்கப்பட்டுள்ளன. இன்று நம்மவர் பலர் இம்முறைப்படி உருத்திராக்க மணிகளைக் கோத்து அணிந்துள்ளனர். இப்பழக்கம் ஹரப்பாவில் மிகுதியாக இருந்ததென்று அறிஞர் வாட்ஸ் அறிவிக்கிறார். இது சுமேரியரிடத்தும் இருந்ததாம்.

சீப்புகள்

அப்பண்டை மக்கள் பலதிறப்பட்ட சீப்புகளைப் பயன்படுத்தி வந்தனர்; அவை தந்தம், மாட்டுக்கொம்பு, எலும்பு, மரம் என்பனவற்றால் ஆனவை; பல வடிவங்களில் செய்யப் பட்டவை. அவற்றுள் சில தலையில் செருகிக் கொள்ளவும் பயன் பட்டன. இங்ஙனம் மகளிர் சீப்புகளைக் கூந்தலிற் செருகிக் கொள்ளும் பழக்கம் இன்று பர்மா நாட்டில் இருந்து வருகின்றது. மேனாட்டு மாதர் சிலர் மெல்லிய வளைந்த சீப்புகளை அணிகின்றனர். ஒரு கல்லறையில் இளம் பெண் ஒருத்தியின் மண்டை ஒட்டின் அருகில் இருபுறமும் பற்களைக் கொண்ட அழகிய சித்திரங்கள் தீட்டப்பெற்ற தந்தச் சீப்பு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. ‘V’ போன்ற வடிவில் செய்யப்பட்ட சீப்பொன்று மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்தது. இது நீண்ட கூந்தலைச் சிக்கின்றிக் கோத உதவியதாகும். இச்சீப்பு நெருங்கிய பற்களையுடையதாய் அழகுறச் செய்யப்பட்டிருந்தமையால், தலையைச் சீவவும் தலையில் வைத்துக் கொள்ளவும் பயன்பட்டிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். இதுபோன்ற சீப்பு எகிப்தில் ‘படரி’ என்னும் இடத்திற்றான் கிடைத்தது வேறு எங்கும் அகப்படவில்லை.

கண்ணாடிகள்

சிந்து வெளி மக்கள் முகம் பார்க்கக் கண்ணாடிகளாகப் பயன்படுத்தியவை யாவை? அவர்கள் செப்பு-வெண்கலத்