பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிகலன்கள்

149


கொண்டிருந்தனர். இங்ஙனம் கூந்தலை முடிதல் சுமேரியாவிலும் பழக்கமாக இருந்தது. பொதுவாகச் சிந்துவெளி மக்களின் கூந்தல் அலை அலையாகவும் சுருண்டு சுருண்டும் தொங்கிக்கொண்டிருந்தது என்பது பல பதுமைகள் வாயிலாக அறியலாம். சிலர் கூந்தலைப் பின்னிப் பக்கங்களில் விட்டிருந்தனர்; இப்பழக்கம் பாபிலோனியரிடமும் இருந்ததேயாகும்.[1]

மீசை இல்லா ஆடவர்

சிந்து வெளியிற் கிடைத்துள்ள ஆண் பதுமைகள் பெரும்பாலான தெய்வங்களையோ - தெய்வமன்ன யோகியரையோ குறிப்பன. எனினும், மனிதன் தன்னை உள்ளத்திற்கொண்டே தெய்வங்களின் உருவங்களைச் சமைப்பது இயல்பு. அந்நிலையை நினைந்து ஆராயின், பண்டைச் சிந்து வெளி மக்கள் மீசையை வைத்திலர் தாடி ஒன்றையே வைத்திருந்தனர் என்பதை அழுத்தமாகக் கூறலாம். இத்தாடியும் பல வகையாகக் காணப்படுகிறது. காது முதல் வளர்ந்துள்ள மயிரும் கீழ் உதட்டடியில் வளர்ந்துள்ள மயிரும் ஒன்றாகத் தோற்றமளிக்குமாறு தாடி வைத்திருத்தல் ஒரு முறை; அதை ஒழுங்குபெறக் கத்திரித்திருத்தல் ஒரு முறை: முகவாய்க் கட்டையின் அடியில்மட்டும் சிறிதளவு தாடிவளர்த்தல் மூன்றாம் முறை. அத்தாடியின் நுனி உள்நோக்கி வளைந்திருக்கும் படி விடுதல் நான்காம் முறை. இம்முறைப்படியே சுமேரியரும் தாடிகளை வைத்திருந்தனர்; ஆனால் பலர் நீள வளர்த்துவிட்டிருந்தனர். மீசை வளர்ந்து மேல் உதட்டில் தொடுதலால் உட்கொள்ளும் உணவில் மாசுபடும் என்று எண்ணி, அவ்வறிஞர் மீசையை அடியோடு சிரைத்து வந்தனர் என்றே கருதவேண்டும். சுகாதார முறையில் உறைவிடங்களை அமைத்து வாழ்ந்த அப்பேரறிஞர்கள், உணவிலும் சுகாதார முறையைக் கையாண்டு மீசையை அறவே ஒழித்தனர் போலும்!


  1. M.S.Vats’s ‘Excavations at Harappa’, Vol. pp.292, 293. Dr.E.J.H.Mackays’ “The Indus Civilization’, pp.104, 105.