பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

மொஹெஞ்சொ - தரோ


இந்த அளவோடேனும் அவர்கள் நின்றனரோ? இல்லை! இல்லை! ஆடவரும் பெண்டிரும் உடலின் பிற பகுதிகளில் வளரும் மயிரையும் களைந்து வந்தனர் என்பது சிந்து வெளியிற் கிடைத்த கணக்கற்ற மழித்தற் கத்திகளைக் கொண்டும் கூர்மையான சிறிய தகடுகளைக் கொண்டும் கூறலாம்’ என்று டாக்டர் மக்கே உரைக்கின்றார்.[1]

கண்ணுக்கு மை

அப்பண்டைக் கால மகளிர் எவ்வகையிலும் இன்றைய மகளிர்க்குப் பின்னிடைந்தவராகத் தெரியவில்லை. அவர்கள் கண்களில் கறுப்பு மை தீட்டிக் கொண்டனர். பெண்டிர் மட்டும் இல்லை. ஆடவரும் மை இட்டுக் கொண்டனர். இருபாலரும் கண்ணுக்கு மை இடச் செப்புக் குச்சிகளையும் பிற மெல்லிய குச்சிகளையும் பயன்படுத்தினர். மகளிர் சிறிய நத்தை ஒடுகளில் குங்குமம் போன்ற செங்காவிப் பொடிகளை வைத்துக்கொண்டு, அவற்றை நெற்றியில் பொட்டிடப் பயன்படுத்தினர். இவை போன்ற நத்தை ஒடுகளைச் சுமேரிய மகளிர் வைத்திருந்தனர். ஆயின், அவர்கள் அவ்வோடுகளில் முகத்திற் பூசும் பொடி வகைகளையே வைத்திருந்தனர்.

முகத்திற்குப் பொடி,

சிந்து வெளி மகளிர் ஒரு வகை வெண்பொடியைத் தங்கள் முகத்திற் பூசி வந்தனர். இப்பொடி மொஹெஞ்சொ-தரோவிலும் ஹரப்பாவிலும் கிடைத்துள்ளது. இதே பொருள் கண்ணுக்கு இனிய மருந்தாகவும் பயன் பட்டிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து. ‘அரிதாரம் போன்ற ஒருவகைப் பொடியும் முகத்திற் பூசிக் கொள்ளப் பயன்பட்டது. ஒருவகைப் பச்சை மண்ணும் நன்றாய்ப் பொடி செய்யப்பட்டு முகத்திற் பூசப் பயன்பட்டதாம். இப்பச்சை மண் கட்டி கட்டியாக மொஹெஞ்சொ-தரோவிற் கிடைத்துள்ளது.


  1. His ‘The Civilisation’, p. 120.