பக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

மொஹெஞ்சொ - தரோ


(24) அக்கேடியர் நகரமான ‘எஷ்ணன்னா’வில் கண்டறியப் பட்ட அரண்மனையுள் நீராடும் அறை அமைக்கப்பட்டது, அக்கேடியர் சிந்து வெளி மக்களோடு கொண்டிருந்த கூட்டுறவினாலேயாம் என்னை வேறு எந் நாட்டிலும் நீராடும் அறைகள் அப்பழங்காலத்தில் அமைக்கப் படாமையின் என்க.[1]

எகிப்தியருடன் வாணிபம்

சிந்து வெளி மக்கள் எகிப்தியருடன் நேராகவோ அன்றிச் சுமேரியர் மூலமாகவோ வாணிபம் செய்து வந்தனர் என்பது கீழ்வரும் உண்மைகளால் உணரலாம்:

(1) சிந்து வெளியிலும் எகிப்திலும் கிடைத்த கழுத்து மாலைகள் வட்டமாகவே அமைந்துள்ளன.

(2) எகிப்தில் கிடைத்த பீடங்கள் சிலவற்றின் கால்கள் எருதின் கால்களைப் போலச் செய்யப்பட்டுள்ளன. கட்டில் கால்களும் அங்ஙனமே அமைந்துள்ளன. சிந்து வெளியில் அத்தகைய பீடம் ஒன்றின்மீது சிவனார் உருவம் அமர்ந் திருப்பதாக உள்ள முத்திரை கிடைத்துள்ளது.[2]

(3) எகிப்தில் உள்ள பிரமிட் கோபுரங்களாகிய அரசர் சவக்குழிகளில், பெண் உருவங்கள் செதுக்கப்பட்ட நன்மணிகள் பல கிடைத்தன. அவை இறந்தவரின் மனைவியரைக் குறிப்பன; அம்மனைவியர் மறுபிறப்பில் தம் கணவரைக் கூடி வாழ்வர் என்பது அப்பண்டைக்கால எகிப்தியர் எண்ணம். அவ்வெண்ணம் சிந்து வெளியிலும் சுமேரியாவிலும் இருந்ததாகத் தெரிகிறது.


  1. Patric Carletons’s ‘Buried Empires’, p. 148.
  2. எருதின் கால்களைப் போலச் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட பீடத்திலிருந்தே நாளடைவில் சிங்காதனம் தோன்றியிருக்கலாம் அன்றோ? இங்ஙனம் எருதின் கால்களைக் கொண்ட பீடத்தின் மீது அமர்த்தப்பட்ட பழமை நோக்கிப் போலும் பிற்கால நூல்கள். சிவனார் எருதை ஊர்தியாகக் கொண்டவர் (ரிஷப் வாஹனர்) என்று கூறுகின்றன!